பெரும்பாலான இந்தியர்களுக்கு பயனளிக்கும் எச்-1 பி விசாவுக்கானக் கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா முடிவு!

அவ்வப்போது அடாவடி அறிவிப்பு வெளியிட்டு வரும் அமெரிக்கா அண்மையில் பெரும்பாலான இந்தியர்களுக்கு பயன் அளிக்கும் எச்-1 பி விசாவுக்கான விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 2019 அக்டோபர் 1-ல் துவங்கும் 2020 நிதி ஆண்டுக்கான, அமெரிக்க தொழிலாளர் நலத் துறையின் வருடாந்திர பட்ஜெட் தொடர்பாக, அமெரிக்க நாடாளு மன்றக் குழு உறுப்பினர்கள் மத்தியில் ஆஜராகி விளக்கம் அளிக்கையில், அமெரிக்க தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அலெக்சாண்டரர் அகோஸ்டா இந்தக் கட்டண உயர்வு திட்டத்தை வெளியிட்டார். ஆனாலும் எச்-1 பி விசா விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு உயர்த்தப்படும்?, எந்தெந்தப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு இது அமலாக்கப்படும்? என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

எச்-1 பி விசா என்பது அமெரிக்காவில் குடியேறுவதற்கான விசா அல்ல. மாறாக, அடிப்படை தகவல் தத்துவ மற்றும் தொழில்நுட்ப வல்லமை தேவைப்படும் சிறப்புப் பணிகளில் வெளிநாட்டுப் பணி யாளர்களை அமெரிக்க கம்பெனிகளில் வேலைக்கு அமர்த்த அனுமதி அளிக்கும் விசா ஆகும். ஆண்டு தோறும் இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுக்க அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் இந்த எச்-1 விசா பெற்றவர்களைத்தான் நம்பி இருக்கின்றன.

இந்த வெளிநாட்டவர்களுடன் போட்டியிட முடியாமல், உள்நநாட்டவர்களான அமெரிக்கப் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் குறைந்த ஊதியத்துக்கு வேலைபார்க்க நிர்பந்தம் ஏற்படுகிறது என்றும் வாதாடும் அதிபர் டிரம்ப் அரசு, எச்-1 பி விசா பெறுவதை கடினம் ஆக்கி கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிய விசா கோரி விண்ணப்பித்த வெளிநாட்டவர்களில் 4-ல் ஒருவருக்கு குடியேற்றத் துறை அதிகாரிகள் விசா மறுத்துள்ளனர் என்பதை சியாட்டில் டைம்ஸ் ஏடு சுட்டிக் காட்டுகிறது.

அமெரிக்க இளைஞர்களுக்கு, தொழில்நுட்ப வேலைப்பயிற்சி வழங்கும் திட்டங்களை விரிவு படுத்துவதற்குத் தேவையான நிதியைத் திரட்ட, எச்-1 பி விசா விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அமைச்சர் அலெக்சாண்டர் அகோஸ்டா நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

எச்-1 விசாவில், ஆண்டு தோறும், 1 லட்சம் வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரி்க்காவுக்கு வருவதாகவும், அவர்கள் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க அனுமதிக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து எப்போதும், குறைந்தது 6 லட்சத்து 50 ஆயிரம் வெளிநாட்டு பணியாளர்கள் எச்-1 பி விசா திட்டத்தின் கீழ் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.