March 22, 2023

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நிகழ்ந்த சோகம்!

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

மோர்பியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்கோட் சரக ஐ.ஜி அஷோக் யாதவ் கூறியதாவது: “மோர்பியில் நிகழ்ந்த துயரச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், பாலத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்த பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

விபத்து குறித்த முக்கியத் தகவல்கள்: குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 233 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் நடைபாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. முன்னதாக பாலத்தை சீரமைப்பதற்காக 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய Fitness Certificate பெறப்படவில்லை என்று மோர்பி நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 500 பேர் பாலத்தின் மீது இருந்துள்ளனர். பாலத்தின் மீது இருந்தவாறு மக்கள் பலரும் சாத் பூஜை செய்துள்ளனர்.

அதேநேரத்தில், பாலத்தின் மீது ஏறிய இளைஞர்கள் சிலர், வேண்டுமென்றே பாலத்தை உலுக்கி சேட்டையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம், புகார் அளித்ததாகவும் எனினும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்தும் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டன. தண்ணீரில் மூழ்கியவர்களை தேடி கண்டுபிடிக்கும் வீரர்களும் ஆக்ஸிஜன் சிலண்டர்களுடன் களத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளின் மூலம் 177 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 100க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதற்குத் தேவையான பணிகளை சுகாதரத்துறையினர் மேற்கொண்டனர்.

பிரதமர் மோடி வேதனை: தன் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் ஒருபோதும் கடந்ததில்லை என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்க்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குஜராத் அரசு துணை நிற்கும் என தெரிவித்த பிரதமர் மோடி, மீட்பு, நிவாரனப் பணிகளில் சிறு தொய்வும் இருக்காது என உறுதி அளித்துள்ளார். மேலும், பிரதமர் சம்பவ இடத்திற்கு செவ்வாய்கிழமை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

நிவாரணம்: விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு 2 லட்சம் ரூபாயும் மாநில அரசு 4 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளன. காயம் அடைந்தவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக தெரிவித்துள்ளன.