September 24, 2021

உயிருக்கு உலை வைக்கும் டிராபிக் இரைச்சல்/ஒலி!

நம் அன்றாட வாழ்வில் ஒலி அவசியம்தான். அதே சமயம் தவிர்க்கப்பட வேண்டியது பெரும் சத்தம். இந்த சத்தம் பொதுவாக காதில் விரும்பத்தகாத விளைவுகள் மற்றும் கோளாறுகளை உருவாக்குகிறது. தேவையற்ற அதிக ஒலி நம்முடைய தினசரி வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை உதாரணமாக நம்முடைய தூக்கத்தை, உரையாடலை பாதிக்கும். எல்லா ஒலியையும் தொல்லையாக கருத முடியாது. தேவையற்ற அளவுக்கு அதிகமான ஒலியின் அளவையே தொல்லை என்கிறோம். இதுவே ஒலி மாசு பட காரணமாகிறது.

traffice july 9

இந்த அதிக சத்தம் உடலுக்கு கேடு என்பதை அனைவரும் தெரிந்து வைத்திருக்கிறோம். உயிருக்கே ஆபத்து என்று இப்போது கண்டுபிடித்துள்ளனர். ஹார்ட் அட்டாக்கும் வரலாம் என்கிறார்கள். அதாவது சாதாரண சத்தம், இரைச்சலை காட்டிலும் 10 டெசிபல் அதிகமானால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகரிக்குமாம். சாதாரண சத்தம் என்பது 80 டெசிபல் வரை. பரபரப்பாக இயங்கும் ஒரு தெருவின் இரைச்சலைவிட இது குறைவு.

இதனிடையே டிராபிக் இரைச்சலால் ஹார்ட் அட்டாக் வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் போது ஏற்படும் இரைச்சலை விட விமான போக்குவரத்தின் போது ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பு குறைவு தான் எனவும் லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் இரைச்சலுக்கும், ஹார்ட் அட்டாக்கிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதாவது டிராபிக் இரைச்சல் மனிதர்களின் காது கேட்டும் திறனை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் என சமீபத்திய ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

இத்தகைய ஒலியால் வரும் பிரச்னைகளை மதிப்பிட இரண்டு அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. என்ன மாதிரியான சத்தம் என்பது ஒன்று. எவ்வளவு நேரமாக காதில் விழுகிறது என்பது அடுத்தது. குழந்தையின் அழுகை, பொம்மைகள் எழுப்பும் ஒலி இதெல்லாம் நம்மால் சகித்துக் கொள்ளக்கூடிய அளவைவிட இரு மடங்கு அதிகம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

காதில் ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு கேட்கும் ஸ்டீரியோ ஒலி 112 டெசிபல் வரை போகலாம். மிக்சி, வாஷிங் மெஷின், ஹேர் டிரையர் போன்ற வீட்டு சாதனங்கள் 90 டெசிபல் வரை ஒலி எழுப்பக் கூடியவை. தெருவில் செல்லும் வாகனங்கள் எழுப்பும் மொத்த சத்தம் எல்லா அளவுகளையும் கடந்தது. இவற்றை எவ்வளவு நேரம் கேட்க நேரிடுகிறது என்பதை பொருத்து உடலுக்கு வரும் ஆபத்தை அளவிடலாம். காது செவிடாவது முதன்மையானது.

கட்டுப்பாடுகள், கண்காணிப்பு நிறைந்த அமெரிக்காவில் எந்த நேரமும் 3 கோடி பேர் ஆபத்தான ஒலியால் பாதிக்கப்படுகின்றனர். அளவில்லாத சுதந்திரம் இருக்கும் நமது நாட்டில் இரைச்சலையும் அதிக சத்தத்தையும் வெறும் சுற்றுச்சூழல் மாசு என்கிறோம். காற்று, நீர் மாசு படுவதை நாம் பார்க்கிறோம் அல்லது தொடுகிறோம். ஒலியை பார்ப்பதில்லை, குடிப்பதில்லை. அதனால் ஆபத்தை அறிவதில்லை.

டென்மார்க்கில் 50 முதல் 64 வயது வரையான 55,000 பேரை பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆய்வு செய்ததில் இதயத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு தெரிய வந்துள்ளது. பிடிக்காத ஒலி, எதிர்பாராத ஓசை, தொடர் இரைச்சல் எல்லாமே இதயத்தை தாக்குகிறது. போக்குவரத்து இரைச்சல்தான் முக்கிய வில்லன். ஹூம்.. பாவம் டிராபிக் கான்ஸ்டபிள்