December 9, 2021

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 3,035 பேர்கள் மனு!

கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 3,035 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சியினரும் தீவிர களத்தில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி(வெள்ளி) தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 13 மற்றும் 14ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. இதனால் 15ம் தேதி (திங்கள்) வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்தது.

அன்றைய தினம் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவில்பட்டியில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், விஐபிக்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். 16ம் தேதி செவ்வாய்கிழமை என்பதால், வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது.

இந்நிலையில், தமிழகம் அதுவரை 3,000-க்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 2,509 ஆண்கள், 525 பெண்கள், 1 திருநங்கை என மொத்தம் 3,035 பேர் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வது நாளை (19ம் தேதி) பிற்பகல் 3 மணியுடன் முடிகிறது. நாளை மறுநாள் (20ம் தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 22ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.