தோஷிபா நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி!

தோஷிபா  நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி!

சர்வதேச அளவில் பிரபலமான மின்னியல் நிறுவனமான தோஷிபா, தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளமுடியாத இக்கட்டில் இருக்கிறது. நிறுவனத்தின் நிதிநிலை ஆடிட் கணக்கறிக்கை இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

toshiba apr 13

மின்னியல் சாதனங்கள் முதல் கட்டுமானத் தொழில்கள் வரை பரந்து காலூன்றி இருக்கும் டொஷிபா, உலகப் பெருநிறுவனங்களில் ஒன்றாக கருதப்பட்ட போதிலும், கடந்த ஏப்ரல் முதல் டிசம்பரை வரையில் அதற்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் 480 கோடி அமெரிக்க டாலராகும். இந்த இழப்பைக் காட்டும் கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமல் இருமுறை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் கணக்குத் தணிக்கை அதிகாரிகள் இதை அங்கீகரிக்க மறுத்து வருவதே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக, தோக்கியோ பங்குச் சந்தையிலிருந்து தோஷிபா நீக்கப்படும் ஆபத்தில் உள்ளது.

இது குறித்துக் கருத்து கூறிய அதன் தலைவர் சட்டோஷி சுனாகாவா, தங்களது நிறுவனம் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளுக்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதேவேளையில் நிதி அறிக்கையை கணக்குத் தணிக்கையாளர்கள் அங்கீகரிக்காமல் இருப்பது பெரும் கவலையைத் தருகிறது என்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பல மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தை விலக நேர்ந்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டு காலத்திற்கு மேலாக நிறுவனத்தின் இலாபத்தை வேண்டுமென்றே உயர்த்திக் காட்டியது மீதான ஊழல் காரணமாக அவர்கள் விலகினார்கள்.அதே போன்ற நெருக்கடி ஒன்று இவ்வாண்டு ஜனவரியில் உருவானது. தோஷிபாவின் அமெரிக்கத் துணைநிறுவனமான வெஸ்ட்டிங் ஹவுஸ் நிறுவனம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி மார்ச்சில் திவாலில் வைக்கப்பட்டது. இதனைத் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே தோஷிபாவின் கணினி சிப்ஸ் வர்த்தகப் பிரிவை தைவானின் மின்னியல் நிறுவனமான ‘ஃபோக்ஸ்கோன்’ வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளது. அதற்காக 270 கோடி டாலர் தரவும் அது தயாராகவுள்ளது என்றாலும் அந்த விற்பனை வருமானம் தோஷிபாவை தூக்கி நிறுத்தப் போதுமானது அல்ல என்றே கருதப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!