இயல்புநிலை திரும்பும் முன் சுங்கக்கட்டண வசூலா? – எதிர்ப்பு குரல்கள் அதிகரிப்பு!

இயல்புநிலை திரும்பும் முன் சுங்கக்கட்டண வசூலா? – எதிர்ப்பு குரல்கள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப் பட்ட நிலையில், மார்ச் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 20ம் தேதி முதல் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் இயங்கவும், ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும் மத்திய உள்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து, சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 20ம் தேதி முதல் சரக்கு வாகனங்கள் பயணிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதற்கு மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு (NHAI) அனுமதி அளித்துள்ளது. இதை அடுத்து நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பும் வரை சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்கவேண்டும் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் .டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

.டிடிவி தினகரன், தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், வரும் 20-ம் தேதிமுதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில், அத்தியாவசியப் பொருட்கள், அவசர மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கான வாகன போக்குவரத்து தொழிலை மேற்கொண்டிருப்போருக்கு இதனால் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். இதன் விளைவாக விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள் – எனவே, தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு, நாடு முழுவதும் இயல்புநிலை திரும்புகிற வரை சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்கவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக, திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளதாக தமிழக சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் செயலாளர் கார்ல்மார்க்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (ஏப்.18) கூறுகையில், சுங்கச்சாவடிகள் ஏப்ரல் 20 முதல் தொடர்ந்து வழக்கம் போல் இயங்கும் என மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, சுங்கச்சாவடி நிர்வாகங்கள் பணியாளர்களை பணிக்கு வர நிர்ப்பந்தித்துள்ளது. தமிழகத்தில் 42 சுங்கச்சாவடிகளில் 2 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கரோனா வைரல் தாக்கும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் காணப்படுவதால் அந்த மாவட்டங்கள் ‘ஹாட் ஸ்பாட்’ எனும் நோய் தொற்று அபாய அடையாள குறியீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு எவ்வித பாதுகாப்பு கவசமும் வழங்காமல் பணிக்கு வர நிர்ப்பந்திப்பது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

மேலும், தமிழகத்தில மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது என்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்கவும், நோய் தொற்றை தவிர்க்கவும், பொதுமக்கள் மற்றும் சிறு, குறு தொழில் செய்வோருக்கும் பயனளிக்கும் வகையில் சுங்கச்சாவடிகள் கட்டண வசூலை 3 மாதங்களுக்கு தடை செய்ய வேண்டும். மேலும் சுங்கக் கட்டண வசூல் தொடர்பாக பிறப்பிக்க உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த முடிவுக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC – All India Motor Transport Congress) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நெருக்கடியான காலத்தில், தேசத்தின் நலன் கருதி, நஷ்டத்துடன் அத்தியாவசியப் பொருட்களை லாரி உரிமையாளர்கள் ஏற்றி வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் குல்தரன் சிங் அத்வால் கூறியுள்ளார்.

முழு போக்குவரத்தும் பொருளாதார நிதி ரீதியாக உடைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஓட்டுனர்களை திரும்ப அழைத்து வருவதற்கும் பொருளாதாரம் இல்லை. இது மற்றொரு பெரிய சவால். ஆயினும் கூட, AIMTCஆல் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குறைந்தபட்ச மீட்புப் தொகையை கொடுப்பதன் மூலம் இந்தத் துறைக்கு அரசாங்கம் உதவுவதற்கு பதிலாக, லாரிகளின் இயக்கச் செலவில் 20% சுங்கக் கட்டணமாகவே செலுத்தப்படுவதாகவும் குல்தரன் சிங் அத்வால் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!