டூலெட் – திரை விமர்சனம்!

டூலெட் – திரை விமர்சனம்!

நம்மை நம் பிரச்னையை ஒரு கண்ணாடியில் நாமே பார்க்கும் சூழல் சில சமயம் மட்டுமே வரும்.. அப்படியான நிலைக் கண்ணாடிதான் செழியனின் ‘டூ லெட்’ திரைப்படம். அதிலும் உலக அளவில் அதிகமாக இருக்கும் வாடகை வீட்டுக் காரர்களின் வாழ்வியலை அழகாக நிறைவாக காட்டி இருக்கிறார்கள். தமிழகத்தில் ரிலீசாகும் முன்பே நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து 32 சர்வதேச விருதுகளையும் இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்றது இந்த படம். மேலும் இரண்டு மணி நேரத்துக்கு குறைவான நேரத்தில் நிறைவான காட்சிகள் பல கொண்ட படமிது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசிஸ்டெண்ட் டைரக்டரான சந்தோஷ், தன் மனைவி, மகனோடு வசித்து வரும் வீட்டை உடனடி யாக காலி செய்யச் சொல்கிறார் ஹவுஸ் ஓனர். இதையடுத்து இன்னொரு வீட்டை தேடி அலைவது தான் முழுப்படத்தின் கதை.

ஆரம்ப பேராவில் சொன்னது போல் நாட்டில் அதிகப்பட்சமானோரான நடுத்தர வர்க்கத்தினர் இந்த வாடகை வீடு விவகாரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யதார்த்தமாக சொல்லி இருப்பதில் முழுமை யாக ஜெயித்து விட்டார்கள் என்று சொல்லாம். இதற்குக் காரணம் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் சந்தோஷ் ஸ்ரீராம், அவரது மனைவியாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார் மற்றும் குட்டி பையன் தருண் ஆகியோருடன் குடியிருக்கும் வீடும் நடித்திருக்கிறது என்பதுதான்.

இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் செழியன் (இவர் கல்லூரி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா வில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் போன்ற வெற்றிப்படங்களில் பணியாற்றியவர்)வழக்கமான ஒளிப்பதிவு திறமையைக் காட்டி படத்திற்குள் ஒன்ற வைத்து விடுகிறார் .பாடலே இல்லாமல், பின்னணி இசையுமில்லாமல் லைவ் ரெக்கார்டிங் தான் முழுப் படமும். அதை பக்கத்து சீட் பெரிசு சொன்ன பிறகுதான் தெரிந்தது, அடடே.!

அதே சமயம் கணவன், மனைவிக்குள் நடக்கும் சிறுசிறு சீண்டல்கள், திடீரென நடக்கும் சண்டை கள், தன்னை இழிவாக நினைக்கும் வீட்டு ஓனரிடம் ஈகோ காட்டும் பாங்கு, வீடு தேடி செல்லும் காட்சியில் ஒரு வீட்டில் முதியவர்களின் நிலையை பார்த்துவிட்டு திரும்பும் காட்சி, மகன் தருணின் அவ்வப்போதைய குறும்புகள் என பல காட்சிகள் நிஜங்களோ என்று நினைக்குமளவு இருக்கிறது.

இப்படி வாடகைதாரரின் முழுக் கஷ்டத்தை பதிவு செய்த இயக்குனர் செழியன், நாட்டில் உள்ள  ஹவுஸ் ஓனர்கள் அத்தனை பேரும் அநியாயக்காரர்கள் என்ற ரீதியில் சுட்டிக் காட்டி இருப்பது தான் நெருடலாக இருக்கிறது. ஆனால் ஹவுஸ் ஓனர்கள் கூட இந்த படத்தை பார்க்கலாம்., ரசிக்கலாம் என்பதுதான் டூலெட் -டின் வெற்றி-

மார்க் 3.75 / 5

error: Content is protected !!