October 18, 2021

2020 ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் ரிலீஸ்!

2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது!!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழா, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றது. தற்போது, 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடருக்கான சின்னத்தைத் தேர்வு செய்யும் வேலை ஜப்பானில் முழு வீச்சில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் பல்வேறு வடிவங்களில் வந்த சின்னங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் பணி, பள்ளி மாணவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. முடிவில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் அதிகாரப்பூர்வ சின்னத்தை ஜப்பானின் ஆளுநர் யூரிகோ, ஒலிம்பிக் அதிகாரப்பூர்வ ஏற்பாட்டுக்குழு தலைவர் யோஷிரோ மோரி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

அதில் நீலம், சிகப்பு என இரண்டு நிறம், இரண்டு வடிவங்களில் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது பேசிய அவர்கள், `மிரைடோவா’ (Miraitowa) என்று பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், `சோமெய்டி’ (Someity) என்று பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் எனத் தெரிவித்தனர்.

`மிரைடோவா’ என்றால் ஜப்பானிய மொழியில் எதிர்காலம் மற்றும் முடிவில்லா காலத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆங்கில வார்த்தையான `So mighty’ என்ற சொல்லிருந்து மருவிய `சோமெய்டி’ என்றால் மிகவும் வலிமை வாய்ந்தது என்று அர்த்தமாகும். பின்னர், சிறுவர்கள் அனைவரும் சின்னத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.