December 1, 2021

சென்னையில் இந்து நாளிதழை விட டைம்ஸ் ஆஃப் இந்தியா-வுக்கு இம்புட்டு ரெஸ்பான்ஸ்! எப்படி?

சென்னையில் 49000 வாசகர்களோடு ஆங்கில தி இந்துவை முந்தியிருக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. இது பெரிய பாய்ச்சல். இந்துவின் கோட்டையாக கருதப்படும் இடம் சென்னை. அதனாலேயே இது முக்கியத்துவம் பெருகிறது. அடுத்து அனேகமாக தமிழக அளவில் இந்துவை டைம்ஸ் ஆப் இந்தியா வீழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.

இந்து நாளிதழுக்கு ஒரு கறார் தன்மை உண்டு. கண்டிப்பான ட்ரில் மாஸ்டரைப் போல எப்போதும் ஒரு பிரம்போடுதான் செய்திகளை சொல்லும். எத்தனை உற்சாகமான செய்தியாக இருந்தாலும் அதையும் எந்திரத்தன்மையோடுதான் உரைக்கும். அல்லது அவர்களுடைய உற்சாகமோ கொண்டாட்டமோ ஒரு மேதையின் பாராட்டுதலைப் போல நம் கண்களுக்கு புலப்படாததாயிருக்கும். மொழி சார்ந்த இலக்கணம் சார்ந்த மரபார்ந்த அம்சங்களில் இந்து கொண்டிருந்த பிணைப்பும் கண்டிப்பும் மிகவும் அடர்த்தியானது. அது எளிய வாசகனை விரட்டக்கூடிய ஜோலிக்கும் ஆடம்பர கண்ணாடிக்கதவு.

தலைப்பில் கூட வித்தியாசமான புதிய சொற்களை இட்டு நிரப்புவார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் பத்து முதல் முப்பது புதிய சொற்களாவது கட்டாயம் இடம்பிடிக்கும். அது சமயங்களில் (வேலைக்கு செல்லும் அவசரகதியில்) வாசிக்கிறவனை திணறடிக்கும். கையில் இட்லியோடு படிக்கிறவன் அந்த நேரத்தில் டிக்ஷ்னரிக்கு எங்குபோவான் என்றெல்லாம் ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை என நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்திருக்கிறேன்.

அப்போது நான் ஆங்கிலம் படித்து அறிவை வளர்த்து பெரிய அறிஞராகும் வேட்கையில் எல்லாம் இருக்கவில்லை. இன்டர்வியூவில் ஆங்கிலத்தில் பேசினால் பதில் சொல்ல அறிவு தேவை என்கிற ஒரே காரணம்தான் இருந்தது. எனக்கு மட்டுமில்லை 80-90களில் பிறந்து பலருக்கும் ஆங்கிலம் என்பது இன்டர்வியூ எனும் வானுயர்ந்த தடைச்சுவரைத் தாண்டுவதற்கான ஒரு நெம்புகோல் மாத்திரம்தான். தினமும் இந்து படித்தால் ஆங்கில அறிவை வளர்த்து அதை தாண்டிவிடலாம் என்கிற MYTH ஒன்று அக்காலத்தில் பரவி இருந்தது. பெரும்பான்மை தமிழ்மீடிய மாணவர்கள் அடர்ந்திருந்த தமிழகம் அது.

எல்லா வீடுகளிலும் நூலகத்திற்கு விரட்டி வாசிக்க வைப்பார்கள். ஒரளவு மிடில்கிளாஸ் குடும்பங்கள் வீட்டிலேயே வாங்கிப்போடுவார்கள். கடைசி பக்கங்களில் வருகிற விளையாட்டு பகுதியை புரிந்தும் புரியாமலும் படம் பார்த்துவிட்டு தூக்கிப்போடுவார்கள். அந்த இளைஞர்களுக்கு இந்து கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் இந்து தன்னுடைய மேதாவிலாசத்தை எப்போதும் யாருக்காகவும் குறைத்துக்கொண்டதேயில்லை.

ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா தேர்ந்தெடுத்த பாதை எளிமைதான். டெக்கான் க்ரானிக்கிள் கூட முயற்சி செய்தது. ஆனால் அது மிகக்குறைந்த விலைக்கு விற்கப்பட்டபோதும் இந்து வோடு போட்டியிட முடியவில்லை. ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா அப்படி இல்லை. பன்னி ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு டைம்ஸ் வந்த போது இறங்கி அடித்தார்கள். அவர்களுடைய வண்ணமயமான மொழி எளிமையோடு இருந்தது. துள்ளலாக இருந்தது. கதைபோல செய்திகளை எழுதத்தொடங்கினார்கள். அவசரகதியில் படிக்கிறவர்களுக்கு ஏற்ப பாய்ன்ட்களை மட்டும் தனிப்பெட்டியில் போட்டு நேரத்தை மிச்சப்படுத்த உதவினார்கள். தமிழில் கூட தலைப்புகள் வைத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தை வாசகனின் வசதிக்கும் சுவராஸ்யத்துக்கும் வேண்டியபடி வளைத்துக் கொள்வார்கள். இன்போகிராபிக் பாணி செய்திகள் வாசிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதில் உதவின. கடந்த பட்ஜெட் போது அவர்கள் முழுப்பக்க அளவில் செய்திருந்த இன்போ அதற்கு ஒரு நல்ல உதாரணம். இதைமட்டுமே பார்த்தால் போதும் ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் படித்தது போல இருக்கும்.

இந்து படிக்கிற பலரும் டைம்ஸை இரண்டாந்தர பத்திரிகை என விமர்சித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் ஆழம் இல்லை என்றார்கள். அது ஜிகினாக்களால் ஏமாற்றப் பார்க்கிறது என்றார்கள். ஆனால் டைம்ஸ் படிப்படியாக இந்துவோடு மல்லுக்கட்டமுடியாமல் திணறி யவர்களால் வளர்ந்துகொண்டிருந்தது. நாள் முழுக்க வைத்து பொறுமையாக படிக்கிற ரிட்டையர்ட் ஆட்களின் பாசமிகு பத்திரிகையாக இந்து மாறிக்கொண்டிருந்தது. அவசர யுகத்தின் ஸ்க்ராலிங் தலைமுறைக்கு ஏற்ற விறுவிறு பத்திரிகையாக டைம்ஸ் செழித்தது.

மொழியடிப்படையில் டைம்ஸ் ஆப் இந்தியா பின்பற்றியது தினத்தந்தியின் பாணி. 70 ஆண்டுகளுக்கு முன்பு தினத்தந்தி அப்படித்தான் தொடங்கியது தன் பயணத்தை. அது வரைக்கும் செய்திதாள் வாசிப்பது என்பதே பணக்காரர்களுக்கும் பண்டிதர்களுக்கும் என்றிருந்த நிலையை மாற்றி, டீக்கடை பெஞ்சுகளுக்கும் ஏழைகளுக்குமான ஒன்றாக அது பயணித்தது. எல்லோருக்கும் புரியும் எளிய தமிழையும் செய்திகளை சுவாரஸ்யப்படுத்துகிற நடையையும் அறிமுகப்படுத்தியது. இன்றும் அதே பாணியைத்தான் விடாப்பிடியாக வைத்திருக்கிறது. பத்திரிகை படிப்பது என்பது பெரிய வித்தை எல்லாம் இல்லை எல்லோரும் வாசிக்கலாம் என்கிற நிலையை கொண்டுவந்தது தந்திதான்.

இந்து வாசிப்பது என்பது கௌரவம் என கருதிய காலம் இன்று மாறிவிட்டது. 2000க்கு பிந்தைய தொழில்நுட்ப புரட்சி அந்த மனநிலையை மாற்றி அமைத்திருக்கிறது. ஆங்கிலம் தெரியாது என்று ஏங்குகிற தலைமுறை இந்து படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்துவின் வேலைவாய்ப்பு பகுதி எண்ணற்றோருக்கு உதவிய காலம் இருந்தது. நானும் கூட அதனால் பயனடைந்திருக்கிறேன். ஆனால் இன்று வேலைவாய்ப்பு களை பத்திரிகைகள் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலையெல்லாம் இல்லை. வாய்ப்புகள் பெருகிவிட்டன. மக்களிடையே பரவலாக கல்வி அறிவு பெற்றதும், ஆங்கில அறிவு என்பது மந்திரவித்தை அல்ல என்கிற மனநிலையும் உருவானதும் இந்துவின் வீழ்ச்சிக்கு வித்திட்டிருக்கலாம்.

“தி ஹிண்டு பின் தங்குவதைக் காண வருத்தமாகத்தானிருக்கிறது” என்று தன் பேஸ்புக் பதிவில் வருத்தமாக பதிவு செய்திருந்தார் மாலன் நாராயணன். இந்து எப்படி தோன்றியது ஏன் தோன்றியது என்கிற வரலாறு இங்கே முக்கியமானது. ஆங்கிலேய ஆதரவு ஊடகங்களுக்கு நடுவில் அவர்களுக்கு எதிராகப் போராடும் இந்தியர்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்கிற மேன்மையான நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இதழ் இந்து. ஆனால் வருடங்கள் செல்ல செல்ல அதன் எலைட் தன்மை அதிகரித்தபடி இருந்தது. பணக்காரர் களுக்கும் ஏராளமாக படித்தவர்களுக்கும் மட்டுமேயான பத்திரிகையை வாசிக்கிறோம் என்கிற எண்ணத்தை உருவாக்கக்கூடியதாக இருந்தது. அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம்.

இப்போதெல்லாம் இளைஞர்கள் பத்திரிகை வாசிக்கிறார்களா என்கிற கேள்வியையும் மாலன் முன்வைத்திருந்தார். இளைஞர்கள் வாசிக்கிறார்கள். ஆனால் அந்தக்காலம் போல இல்லாமல் இணையத்தின் வழி வாசிக்கிறார்கள். பத்திரிகை செயலிகள் வழி அவர்கள் படிக்கிறார்கள். பிடிஎஃப்பாக எல்லா பத்திரிகைகளும் இன்று வலம்வருகின்றன.. ஆச்சர்யமாக இந்து தன்னுடைய இணையதளத்திலும்கூட பத்திரிகையில் காணும் அதே இறுக்கமான தன்மையையும் எலைட் மொழியையும் தொடர்கிறது.

அதிஷா