February 6, 2023

அச்சச்சோ.. இன்னிக்கு உலக தவளை தினமின்பதை மறந்துடீங்களா?

மழைக்காலம் துவங்கி விட்டால் “கிரீச், கிரீச்’ என்ற ஒலி எழுப்பி நம்மை முகம் சுளிக்க வைப்பவை தவளைகள். அவை தத்தி, தாவி, குதித்து வீட்டுக்குள் வந்து விட்டால், கையில் குச்சியை எடுத்து கொண்டு, நாம் தாண்டவம் ஆடத்துவங்கி விடுவோம். ஆனால், தவளைகளால் நமக்கு தீங்கு இல்லை; நமக்கு மறைமுகமாக நன்மை செய்து, மனிதரின் நண்பனாக திகழ்கின்றன. தேனீ, சிட்டுக்குருவியை தொடர்ந்து இந்த “நண்பர்’ இனமும் அழிந்து கொண்டிருக்கிறது; அதற்கும் மனிதர்கள் தான் காரணம்.

ஓர் இடத்தில் இயற்கையாகவோ அல்லது மனித செயல்களாலோ ஏற்படும் மாற்றங்களால் முதலில் பாதிக்கப்படும் சில உயிரினங்கள், மாறிவரும் அந்த வாழ்விடத்தின் நிலையை சில அறிகுறிகளின் மூலம் வெளிக்காட்டும். அத்தகைய உயிரினங்கள் ” சூழலியல் வெளிக்காட்டிகள் ” ( Ecological Indicators) என்றழைக்கப்படுகின்றன. அவற்றில் தவளைகள் மிக முக்கியமானவை. உலகிலுள்ள ஏழு கண்டங்களில், அண்டார்டிகா தவிர மீதமுள்ள ஆறு கண்டங்களிலும் தவளைகள் வாழ்கின்றன.

தவளைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்விகள் (Amphibians). அவை பெரும்பாலும் வாழ்விடம், உணவு, இனப்பெருக்கம் போன்றவற்றுக்கு நீர்நிலைகளையே பெரிதும் நம்பியுள்ளன. நீர்நிலைகளற்ற வறண்ட பாலைவனப் பகுதிகளிலும், பனிப்பிரதேசங்களிலும்கூட சில தவளையினங்கள் உயிர் வாழ்கின்றன. பூமத்திய ரேகையை ( Equator ) ஒட்டியுள்ள வெப்பமண்டலப் பகுதிகளான ( Tropical regions ) தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளில்தான் உலகின் 80% தவளையினங்கள் வாழ்கின்றன. மீதமுள்ளவை வட அமெரிக்கா, ஐரோப்பா, வட மற்றும் மத்திய ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மிதமண்டலப் பகுதிகளில் ( Temperate regions ) வாழ்கின்றன.

நீர்நிலைகளில், ஈரப்பதமிக்க இடங்களில், மண்ணுக்கடியில், தாவர இலைகளில், மரப்பட்டைகளில், மரப்பொந்துகளில், பாறைகளில், பாலைவனத்தில், பனிமலைகளில் என்று எண்ணற்ற வாழ்விடங்களில் தவளைகள் வாழ்கின்றன. யானை, புலி போல தவளைகளுக்கு பரந்துவிரிந்த பெரிய வாழ்விடங்கள் தேவையில்லை. தவளைகள் மிகச்சிறிய வாழ்விடங்களில் வாழ்பவை. ஒரேயொரு பாறையிலோ, ஒரு மரத்திலோ, ஒரு பொந்திலோ, ஒரு கிணற்றிலோ கூட ஒரு தவளை தன் மொத்த வாழ்நாளையும் வாழ்ந்து முடித்துவிடும். உலகிலுள்ள பெரும்பாலான தவளைகளின் வாழ்விடங்கள் மிகச்சிறிய இடங்களே.

தவளைகளின் மற்றுமொரு தனிச்சிறப்பு அவற்றின் சுவாசமுறை. நான்கு வகையான சுவாசமுறைகளைக் கொண்டிருக்கின்றன தவளைகள். நீரில் வாழும் தலைப்பிரட்டைகள், மீன்களைப் போல் செவுள்கள் ( Gills ) மூலம் சுவாசிக்கின்றன. முழு வளர்ச்சியடைந்தவை தோல்களின் மூலமும், மூக்கு மற்றும் வாய் மூலமும் சுவாசிக்கின்றன. தோல்களின் மூலம் சுவாசிப்பதே தவளைகளின் பிரதான சுவாசமுறை. நீரிலும், காற்றிலும் இருக்கும் பிராணவாயுவை ( Oxygen ) தோல்களின் மூலம் உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்கின்றன. தோல் வழுவழுப்பாய் இருப்பவை Frogs எனவும் சொரசொரப்பாய் இருப்பவை Toads எனவும் அழைக்கப்படுகின்றன.

இயற்கைச் சூழலமைப்பில் தவளைகள் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றன. தவளைகள் பெரும்பாலும் பூச்சிகளை உணவாகக் உட்கொள்பவை. பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தவளைகளின் பங்கு மிக முக்கியமானது. தவளைகளின் உணவில் கொசுக்கள் ஏராளம். கொசுக்களின் பெருக்கத்தையும் அவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. மேலும் கொசு முட்டைகளையும், முட்டைப்புழுக்களையும் தலைப்பிரட்டைகள் உட்கொள்வதால், கொசுக்களின் பெருக்கம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.

உணவுச்சங்கிலியில் தவளைகளையும், அவற்றின் தலைப்பிரட்டைகளையும் உண்ணும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. நீரில் வாழும் தலைப்பிரட்டைகளை மீன்குஞ்சுகளும், மீன்களும் உணவாக உட்கொள்கின்றன. கொக்கு, நாரை, வாத்து, மீன்கொத்தி போன்ற நீர்ப்பறவைகளுக்கும், கழுகு, பருந்து, ஆந்தை போன்ற வேட்டையாடி உண்ணும் ஊனுண்ணிப் பறவைகளுக்கும், பாம்பு, எலி, வவ்வால் போன்ற ஊர்வன மற்றும் பாலூட்டி விலங்குகளுக்கும் தவளைகள் உணவாகின்றன. இப்படி பூச்சியினங்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், பல உயிரினங்களுக்கு உணவாகவும் இருக்கின்றன தவளைகள். இப்படி இயற்கைச் சூழலமைப்பின் மிக முக்கிய இடத்தில் இருக்கும் தவளைகள் அழிந்தால், அது ஒட்டிமொத்த உணவுச் சங்கிலியையும் பாதிக்கும்.

ஒரு நீர்நிலையிலோ, வனத்திலோ, நம் வீட்டுத் தோட்டத்திலோ தவளைகள் இருந்தால் அது ஒரு ஆரோக்கியமான இயற்கைச்சூழலின் வெளிப்பாடு. அப்படி அவை அங்கிருந்து அழிந்துபோனால், இயற்கைச் சூழலமைப்பை பாதிக்கும் ஏதோ ஒன்று அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று பொருள். தவளைகள் இருந்தால் அந்த இடத்தில் கொசுக்கள் பெருகிவிடாமல் கட்டுப்பாட்டில் இருக்கும். தவளைகளின் அழிவு கொசுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வழிவகுத்துவிடும். இப்பொழுது புரிகிறதா? கொசுக்களின் எண்ணிக்கை ஏன் இப்படி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்று?

தவளைகள் நம் கண்முன்னே அழிந்துகொண்டிருக்கும் உயிரினம். அவற்றுக்கு அப்படி என்னதான் பிரச்னை? தவளைகள் உயிர்வாழ நீர்நிலைகளையே பெரிதும் நம்பியிருக்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாமோ வளர்ச்சி என்ற பெயரில் முதலில் சூறையாடுவது அந்த நீர்நிலைகளைத்தான். அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுவதால், அவையும் அங்கிருந்து அழிந்துவிடுகின்றன. மற்றொரு பெரிய பிரச்னை, அன்றாடம் நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகள். இப்படி நம்மூரிலுள்ள ஓடைகள், ஆறுகள், கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்தையும் பாழாக்கிவிட்டோம். நீர்நிலைகளின் இயற்கைச்சூழல் கெட்டு, மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் அவை இருப்பதற்கான ஓர் வெளிப்பாடுதான் தவளைகளின் அழிவு.

தவளைகள் தோலின் வழியாக சுவாசிப்பவை. அவற்றின் தோல் மிகவும் மென்மையானதாகவும், சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களை தாங்கும் திறனற்றவையாகவும் இருக்கும். தான் வாழும் பகுதியில் இருக்கும் காற்றிலும், நீரிலும், நிலத்திலும் மனித செயல்களால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை அவற்றால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளின் நச்சுத்தன்மை, தவளைகளின் தோல் வழியாக உடலுக்குள் சென்று அவற்றின் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால் அவை செத்துவிடுகின்றன. மிகச்சிறிய வாழ்விடங்களில் வாழ்வதால் அவற்றால் வேறு இடத்திற்கும் இடம்பெயர முடியாது. அதனால் அவை அங்கிருந்து அழிவது சாத்தியமாகிவிடுகிறது. தவளைகளின் அழிவுக்கு முதன்மையான காரணம் மனித செயல்பாடுகள்தான்.

உதாரணமாக, நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சியில் புல்வெளிகளுக்கு நடுவே பலகோடி ஆண்டுகளாக பல குட்டி சோலைக்காடுகள் ( Shola Forest Pockets ) இருக்கின்றன. அச்சோலைக் காடுகள் இயற்கையாகவே ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து காணப்படுகின்றன. இப்படி அமைந்திருக்கும் சோலைக்காடுகளில் நூற்றுக்கணக்கான தவளையினங்கள் வாழ்கின்றன. உலகில் வேறெங்கும் காணமுடியாத பல ஓரிடவாழ் தவளையினங்கள் ( Endemic Frogs ) மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்கின்றன. இம்மலைகளில் காணப்படும் தவளையினங்களில் கிட்டத்தட்ட 87% ஓரிடவாழ்விகள் ( Endemics ).

புதிதாக மலைகளில் சாலை அமைத்தல், நீர்த்தேக்கங்கள் கட்டுதல், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உருவாக்குதல் போன்ற செயல்களால் அந்தப் பழமையான சோலைக்காடுகள் அழியும் நிலை ஏற்பட்டால், அதில் வாழும் பல ஓரிடவாழ் தவளையினங்களும் அழிவது சாத்தியமாகிவிடும்.

அதுசரி, தவளைகள் அழிந்தால் நமக்கென்ன?

தவளைகள் உணவுச்சங்கிலியில் மிக முக்கிய இடத்தில் இருப்பதால், அவை ஒரு இடத்திலிருந்து முற்றிலும் அழிந்துபோனால் ஒட்டுமொத்த இயற்கைச் சூழலமைப்பும் பாதிப்புக்குள்ளாகும். அது மனிதர்களையும் பாதிக்கும். மேலும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சோலைக்காடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பல தவளையினங்கள் இருக்கலாம். உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் எய்ட்ஸ், புற்றுநோய், சிகா வைரஸ், காலரா, மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்து அங்கிருக்கும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சில தவளைகளில் இருக்கலாம். அப்படிப்பட்ட தவளைகள் அழிந்துவிட்டால் இழப்பு யாருக்கு ? நமக்குத்தான்.

தவளைகள் அழிய பல காரணங்கள் உண்டு. உணவுக்காக வேட்டையாடப்படுவதால் அழிவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதும்; தண்ணீர் பஞ்சமும் மற்றொரு காரணம். கடந்த 40 ஆண்டுக்கு முன், இந்தியாவில் தவளைகள் அழிய துவங்கின. ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் மக்கள், இதன் கால்களை விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தியா, பங்களாதேஷ் தவளைகளுக்கு வெளிநாட்டு சந்தையில் மதிப்பு அமோகம். இதனால், இரு நாடுகளும், கால்களை போட்டி போட்டு ஏற்றுமதி செய்தன. 1978 ல், 3,500டன் கால்களை இந்தியா ஏற்றுமதி செய்தது.

இனப்படுகொலை: இவ்வளவு கால்களை சேகரிக்க, ஆறு கோடி தவளைகள் கொல்லப்பட்டன. கடந்த 1981 ல், 4,368 டன் கால்கள் ஏற்றுமதியாகின. இதன் மூலம், நம்நாட்டுக்கு 95 லட்சம் டாலர் பணம் கிடைத்தது. வயல்களில் வசிக்கும் “ராணா டை கரீனா’, பச்சை நிறமுள்ள “ராணா ஹெக்ஸ்டக்டைலா’ இனங்கள் அதிகளவில் கொல்லப்பட்டன. தவளைகளை நாம் ஏற்றுமதி செய்தபிறகு தான், கோடிக்கணக்கான ரூபாய்க்கு பூச்சி மருந்துகளை நாம் இறக்குமதி செய்தோம். தவளைகள் இருந்தபோது, பூச்சி கொல்லிக்காக செலவிட்ட தொகையை விட இது, பல மடங்கு அதிகம். தவளைகளை ஏற்றுமதி செய்ததால், பெற்ற வெளிநாட்டு பணத்தை விட; பூச்சி கொல்லி மருந்து இறக்குமதி செய்ய, நாம் அதிக தொகை கொடுத்துள்ளோம். “கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பதை போல, “கோமாளித்தனத்தை’ தாமதமாக உணர்ந்து கொண்ட மத்திய அரசு, தவளை ஏற்றுமதியை தடை செய்தது. வன உயிர் பாதுகாப்பு சட்டப்படி, தவளைகளை பிடிப்பது, கொல்வது குற்றம் எனவும் சட்டம் இயற்றப்பட்டது. புவி வெப்பத்தால் ஏற்படும் “புற ஊதா கதிர்கள்’ தவளைகளின் இனபெருக்கத்தை சிதைக்கின்றன; “அக்வாட்டிக் பங்கஸ்’ எனும் தோல் நோயையும் ஏற்படுத்தி, தவளை இனத்தை அழிக்கிறது. பூச்சி மருந்துகளின் வீரியத்தால் இவை பெருமளவு செத்து மடிகின்றன. “ஸ்போர்ட் பிஷ்’ எனும் வெளிநாட்டு மீன்கள், குஞ்சு தவளைகளை சாப்பிடுகின்றன. கியூபா மரத்தவளைகளும், சிறு தவளைகளை அழிக்கும். இது போன்ற காரணங்களால், மனிதர்களின் நண்பனான தவளைகள் அழிந்து வருகின்றன. யாருக்கும் தொல்லை தராத, நன்மையை மட்டுமே வழங்கும் இது போன்ற உயிரினங்களை பாதுகாப்பது நம் கடமை.

அகஸ்தீஸ்வரன்