இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன டி.டி.வி. தினகரனின் பரிசுப் பெட்டி சின்னம்!

இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆன டி.டி.வி. தினகரனின் பரிசுப் பெட்டி  சின்னம்!

பார்லிமெண்ட் தேர்தல் மற்றும் அசெம்பளி பை எலெக்‌ஷனில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு கிப்ட் பாக்ஸ் (பரிசுப்பெட்டி) சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்றிரவு உத்தரவிட்ட விஷயம் இன்று காலை முதல் மாலை வரை இந்திய அளவில் ட்ரெண்டிங்காகி விட்டதுதான் ஹைலைட் .

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து, அதன் இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

இதனிடையே தமிழகத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், (அமமுக) அதன் கூட்டணி சார்பில் 39 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. இதையொட்டி அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்ட நிலையில், குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

அதனால் தங்களுக்கு பொது சின்னம் – அதுவும் குக்கரையே ஒதுக்குவது தொடர்பாக டிடிவி தினகரன் தரப்பு சுப்ரீம் கோர்ட்டை நாட, அமமுக தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் பொதுச் சின்னம் ஒன்றை ஒதுக்க உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அமமுக கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. தினகரன் தரப்பு வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச் சின்னமாக பரிசுப் பெட்டி சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள தேர்தல் ஆணையம், உடனடியாக அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு அனுப்பி வைக்கப் படுகிறது என்றும் டிடிவி தினகரன் அணியினருக்கு இந்த சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. இதன்மூலம் டிடிவி தினகரன் அணி இந்த தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் மூலம் 59 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பரிசுப்பெட்டி சின்னத்தில் தினகரன் அணியினர் போட்டி யிட்டாலும் அவர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பரிசுப் பெட்டி கிடைத்தது குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “மாபெரும் சட்டப் போராட்டத்திற்கு பின், தேர்தல் ஆணையம் அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. முதலில் 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் எங்களுக்கு அனுப்பி இருந்தது. அதில் இருந்த பரிசுப் பெட்டியை பார்த்த போது, கடந்த 2016ல் ஜெயலலிதா அறிமுகம் செய்த பரிசுப் பொருட்கள் அடங்கிய தாய்-சேய் நலத்திட்டம் நினைவுக்கு வந்தது. எனவே சென்டிமெண்ட் காரணமாக, ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை தேர்வு செய்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி உடனடியாக சின்னம் வழங்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் நன்றி” என்றார்.

இந்த சின்னம் குறித்த விபரம் நேற்றிரவே டிடிவி தினகரனுக்கு கிடைத்த நிலையில் ஐ டி விங் துணையுடன் நைட் முழுக்க வேட்பாளர்கள் படத்துடன் பரிசுப் பெட்டி சின்னத்தை இணைத்து தயாரித்து அனுப்பி விட்டு அதிகாலை நாலு மணிக்குதான் வீட்டுக்கு போனாராம் தினகரன். அதிகாலை ஏழு மணிக்கு இது குறித்து அறிவிப்பு வெளியானது முதல் ட்ரெண்டிங்காகி விட்டது பரிசு பெட்டி சின்னம்.

error: Content is protected !!