போஸ்ட் மேன் துணையுடன் காய்கறி & பழங்கள் விற்பனை!

போஸ்ட் மேன் துணையுடன் காய்கறி & பழங்கள் விற்பனை!

ஜனங்களின் வீடு தேடி போய் கடிதங்களை வழங்கும் தபால்காரர்கள் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் திட்டம் அமல்படுத்த உள்ளனர். இந்த திட்டம் இன்னும் சில தினங்களில் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது..

கொரோனா பீதியால் வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களுக்கு காய்கறி பழங்களை டெலிவரி செய்ய தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ ரிக்ஷாக்கள் சரியாக பொருட்களை டெலிவரி செய்வதில்லை என்று புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காய்கறி பழங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தடையாக உள்ளன. இந்த பிரச்சனைக்கு தீர்வாக இந்த புதிய முயற்சியைத் தொடங்க தோட்டக்கலைத்துறை முடிவெடுத்தது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், ஒவ்வொரு தபால் நிலையத்தின் செயல்பாட்டு பரப்பளவைப் பொறுத்து காய் கறிகளின் பொட்டலங்கள் மட்டுமே டெலிவரி செய்யப்படும். ஒவ்வொரு பார்சலிலும் அதிக பட்சம் 7 கிலோ காய்கறிகள் அல்லது பழங்களை அனுப்ப விரும்புகிறோம். தபால் துறை தனது அனுபவத்தால் இதுபோன்ற சிறிய எடையுள்ள பார்சல்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். எந்த சிரமமும் இல்லாமல் பார்சல்களை விநியோகிக்க தபால் துறையிடம் அதற்கேற்ற வாகனங்கள் உள்ளன என்று அந்த மூத்த அதிகாரி கூறினார்.

மேலும், ஊராடங்கால் தபால் துறை தற்போது எந்த பார்சல்களையும் கையாளவில்லை. இந்த புதிய முயற்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க முடியாமல் போராடும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய தபால் துறைக்கு தேவையான வருவாயையும் ஈட்டும். வழங்கப்படும் ஒவ்வொரு பார்சலுக்கும், தபால் துறைக்கு பார்சலின் மொத்த மதிப்பில் 10 சதவீதம் கமிஷனாக கிடைக்கும்.

ஆட்டோ ரிக்ஷாக்கள் ஒழுங்காக காய்கறிகளை டெலிவரி செய்வதில்லை என்று மக்கள் தொடர்ந்து புகார் அளித்தாலும் வேலையை சரியாக செய்யாத ஆட்டோ ரிக்ஷா உரிமை யாளர்கள் மீது தோட்டக்கலைத் துறையால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் கடிதங்கள் மற்றும் பார்சல்களை உடனடியாக வழங்குவதில் அஞ்சல் துறை பெயர் பெற்று உள்ளதால் இதுபோன்ற சிக்கல்கள் வர வாய்ப்பில்லை.

தவிர, தபால்காரர் அல்லது பெண் தங்களது அதிகார வரம்பில் உள்ள தெருக்களையும் சாலைகளையும் நன்கு அறிந்திருப்பதால் விநியோகத்தை தாமதப்படுத்த வாய்ப்பில்லை. அவர்கள் பெரும்பாலும் குடியிருப்பாளர்களுடன் ஒரு நல்ல தனிப்பட்ட உறவை கொண்டிருப்பதால், இந்த புதிய முயற்சி வெற்றி பெறும் என்று அரசு தோட்டக்கலைத்துறை நம்பிக்கைத் தெரிவிக்கிறது.

error: Content is protected !!