சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வர இருப்பது கல் குவாரி தண்ணீர்!

சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வர இருப்பது கல் குவாரி தண்ணீர்!

நம்ம சிங்கார சென்னையின் மக்கள்தொகை சுமார் 80 லட்சத்துக்கும் அதிகம். 426 சதுர கி.மீ. பரப்பில் விரிந்து கிடக்கும் இம்மாம் பெரிய மாநகரத்தின் குடிநீர்த் தேவையை, பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஏரிகள்தான் நிறைவு செய்து வருகின்றன. சராசரியாக சென்னைக்கு நாளொன்றுக்கு 1200 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், 550 மில்லியன் லி. தான் மெட்ரோ வாட்டர் மூலம் வினியோகிக்கப்படுகிறது. பலகோடி செலவில் பிளாண்ட் போடப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் சொற்பத் தண்ணீர் கிடைக்கிறது. மற்றபடி தனியார் வணிகத்தின் மூலமாகவே சென்னையின் தாகம் தீர்கிறது. தண்ணீர் விற்பனை, பல நூறு கோடிகள் புழங்கும் பரபரப்பான தொழிலாக மாறிவிட்டது.

chennai water apr 18

‘‘மழைதான் சென்னையின் குடிநீருக்கான ஆதாரம். மழை இல்லாவிட்டால் தண்ணீர் பஞ்சம் வந்துவிடும். ‘மழைநீரை சேகரியுங்கள்’ என்று மக்களிடம் சொல்கிற அரசு, மழைநீரை சேகரிக்க ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் நிஜம். புதிதாக ஒரு குளம் வெட்டிவில்லை. அதே சமயம் இருக்கும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தி தண்ணீரை சேகரிப்பதற்கு பதிலாக ஏரிகளில் குடியிருப்புத் திட்டங்களை உருவாக்கி கான்க்ரீட் காடாக மாற்றுகிறார்கள்.

சென்னையில் வினியோகிக்கப்படும் பெரும்பங்கு குடிநீர் பூந்தமல்லி, திருப்போரூர், பஞ்செட்டி, திருவள்ளூர், ஆரணியாறு, கொசஸ்தலையாறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1,416 ஏரிகள், 1,896 குளங்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளை தூர்வார ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனதோ தெரியவில்லை.

தரமற்ற தண்ணீரை மக்கள் தலையில் கட்டும் தனியார் முதலாளிகளை ஒடுக்க வேண்டிய அரசு, அவர்களுக்குப் போட்டியாக வியாபாரம் செய்கிறது. பணம் இருப்பவர்களுக்கு நல்ல தண்ணீர், இல்லாதவர்களுக்கு சாக்கடை கலந்த தண்ணீர் என்பதே அரசின் கொள்கையாக இருக்கிறது…’’ என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பதான் செய்கிறார்கள்

இதனிடையே சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆந்திர மாநில அரசு கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. (1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பருவமழை பொய்த்து போனதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் சோழவரம் ஏரி வறண்டுவிட்டது. பூண்டி உள்ளிட்ட 3 ஏரிகளிலும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் இல்லை. இதனால் சென்னை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, “சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 1,006 மில்லியன் கன அடி (1 டி.எம்.சி.) தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன் மூலம் 40 நாட்களுக்கு குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். கோடைமுழுவதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கோரி விரிவான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆனால் ஆந்திர மாநில அரசு கைவிரித்துவிட்டது. காரணம் அங்கும் போதிய மழையின்மையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை. கோடை மழைவந்தால் பார்க்கலாம் என்று கூறி உள்ளனர். கோடை மழையும் பொய்த்து போனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க முடியாது.

மாற்றுவழியாக நெய்வேலி சுரங்கத்தில் இருந்து கூடுதலாக தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளோம். இதுதவிர சென்னை புறநகர் பகுதியில் 31 கல்குவாரிகள் தேர்வு செய்யப்பட்டு தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கல்குவாரிகளில் உள்ள தண்ணீர் மாதிரியை எடுத்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் சோதனைக்கு அனுப்பப்பட்டது.

அதில் 22 கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தலாம் என்று சான்று வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி விரைவில் அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதுதவிர போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பதுடன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய விளைநிலங்களில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறவும் திட்டமிட்டு வருகிறோம்”என்று கூறினார்கள்.

error: Content is protected !!