March 24, 2023

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு சுமூகமாக முடிந்தது!- முழு ரிப்போர்ட்!

தோ.. இதோ.. என்று மிரட்டிக் கொண்டிருந்த தமிழக சட்டப்பேரவைக்கான 16-ஆவது தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அடுத்த மாதம் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஏழு மணி நிலவரப்படி 71.79% சதவீத வாக்குகள் பதிவானதான முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் வாக்கு செலுத்தவில்லை. அதேபோல் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெறத் தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த ஊரில் சிறுவம்பாளையத்தில் ஜனநாயக கடமையாற்றினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய பிறகு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்குப்பதிவு செய்தார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் தங்களுடைய வாக்கு செலுத்தி கவனம் ஈர்த்தார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் வாக்குப்பதிவு செய்தார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களும் தங்களுடைய ஜனநாயக கடமையாற்றினார்கள்.

அந்த வகையில் தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமாகத் திருநெல்வேலியில் 9.98% வாக்குப்பதிவு நடந்துள்ளது. தலைநகர் சென்னையில் 10.58% வாக்குப்பதிவானது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 39.61 % வாக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிகபட்சமாக விருதுநகரில் 41.79 % குறைந்தபட்சமாக நெல்லையில் 32.29% பதிவானது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 53.35% வாக்குப்பதிவானது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 59.73%, குறைந்தபட்சமாக நெல்லையில் 41.58%, சென்னையில் 46.46% வாக்குப்பதிவானது.

மாலை 5 மணிநிலவரப்படி தமிழகத்தில் 63.60% வாக்குப்பதிவானது. அதிகபட்சமாக நாமக்கல் 70.79%, கள்ளக்குறிச்சியில் 69.60%, கரூரில் 69.21% குறைந்தபட்சமாக நெல்லையில் 50.05%, சென்னையில் 55.31%,செங்கல்பட்டு 53.39% வாக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இரவு 7 மணி நிலவரப்படி 71.79% வாக்குகள் பதிவானதாம். நள்ளிரவில் முழுமையான எண்ணிக்கை தெரிய வரும். புறநகர்களை விட கிராமப்புறங்களில் அதிக வாக்குப் பதிவு. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78% வாக்குப்பதிவு. சென்னை மாவட்டத்தில் மிகவும் குறைவாக 59.40% வாக்குப்பதிவு ஆனதாகத் தகவல்.

ஒரு வழியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சென்னையில் பதிவுச் செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரியில் உள்ளிட்ட கல்லூரியில் வைக்கப்படும்.