March 31, 2023

நம்மூர் மதுக்கடையிலும் பெண் விற்பனையாளர் நியமிப்பார்களா? – ‘குடி மக்கள்’ ஆர்வம்

கேரளாவில் அரசு மது விற்பனை கழகத்தின் சார்பில் 350-க்கும் மேற்பட்ட சில்லறை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்கள் மட்டும்தான் பணியாற்றி வருகின்றனர். இதில், பெண்கள் அலுவலக உதவியாளர் என்ற மட்டத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். எழுத்துத்தேர்வு மூலமே இவர்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நிலையில் 2010ஆம் ஆண்டில் நடந்த எழுத்துத்தேர்வில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷைனி என்ற பெண் உட்பட எட்டு பேர் தேர்வு பெற்றனர். ஆனால், பெண்கள் என்பதால் அவர்கள் விற்பனையாளர்களாக நியமிக்கப்படாமல் இருந்தனர். இதை எதிர்த்து ஷைனி உட்பட எட்டு பேரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த சில நாள்களுக்கு முன் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, ‘மதுக்கடைகளில் பணி அமர்த்துவதில் பாலின வேறுபாடு காட்டக் கூடாது. தேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஷைனி அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக நேற்று முன்தினம் பணியில் சேர்ந்தார். மற்ற பெண்களுக்கும் உடனடியாக பணி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு மதுபான விற்பனை கழகம் தொடங்கி 33 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஷைனி முதல் விற்பனையாளராகப் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்திலும் ‘டாஸ்மாக்’ மது விற்பனை கடைகளில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பெண் விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டால் பெண் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் பாட்டிலுக்கு அதிக விலை வைத்து கொள்ளை அடிப்பது, போலி மதுபாட்டில்கள் விற்பனை போன்ற முறைகேடுகள் குறையும் என்றும் ’குடி மக்கள்’ விருப்பம் தெரிவித்துள்ளனர்.