கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

கவர்மெண்ட் பஸ் ஸ்ட்ரைக் ஸ்டார்ட் ஆயிடுச்சு! –

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் 13வது ஊதிய உயர்வு குறித்து அடுத்தடுத்து நடந்த பல்வேறு கட்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நாளை மே 15ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதே சமயம் இந்த வேலை நிறுத்தம் உதகை, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றே தொடங்கிவிட்டது .

bus strike may 14

அதே சமயம் இது குறித்து போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், “தொழிலாளர் நலனை தொழிற்சங்கத்தினர் முக்கியமாக கருதவில்லை. வேலைநிறுத்தம் என்றநோக்கத்தோடு மட்டுமே பேச்சுவார்த்தையில் அவர்கள் கலந்து கொண்டனர் . இந்த ஸ்டிரைக்கை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டு கொண்டோம். தொழிலாளர்களுக்காக ரூ.750 கோடியுடன் கூடுதலாக ரூ.500 கோடி வழங்க ஒப்பு கொண்டோம். இருக்கும் பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரே நாளி்ல தீர்வு காண முடியுமா என தொழிலாளர்கள் யோசிக்க வேண்டும்.

அரசின் நிலைப்பாட்டை 37 தொழிற்சங்கத்தினர் ஏற்று கொண்டனர். 10 தொழிற்சங்கத்தினர் மட்டுமே அரசை எதிர்க்கின்றன. வேலை நிறுத்தம் என்ற ஒரே எண்ணத்தில் தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் திசை திருப்பகின்றன. சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கூடுதலாக மின்சார ரயில் சேவை வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கை முறியடிக்க தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். ஓய்வு பெற்ற ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

முன்னதாக போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. அதன்படி 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் போன 2016ம் ஆண்டு முடிவடைந்து விட்டது. ஆனால் அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு, அரசியல் குழப்பம் போன்றவற்றால் 13வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதனிடையே போக்குவரத்துத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை, பணப்பலன் உள்ளிட்டவைகளை அளிக்காமல் தாமதப்படுத்தி வந்தது. அதே போல, பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் கடந்த மார்ச் மாதம் முதலே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதே சமயம் 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்பட வில்லை. இன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது, ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகைக்காக தற்போது 750 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அதை ஏற்க தொழிற்சங்க நிர்வாகிகள் மறுத்து விட்டனர். இதற்குக் காரணம் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தற்போது ரூ.7000 கோடி நஷ்டத்தில் உள்ளது. இதை தமிழக அரசு சேவை துறையாகக் கருதி இந்த பணத்தை வழங்க வேண்டும். தங்களது பணப்பலனை மட்டுமே நம்பியுள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிலுவைத்தொகையை வழங்கா விட்டால் அவர்கள் நிலை என்னவாகும் என்பதால் தமிழக அரசு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கூறியதை அரசு ஏற்க முன்வராததாலும் திட்டமிட்டப்படி ஸ்ட்ரைக் – அதிலும் ஒரு நாள் அட்வான்ஸாகவே ஆரம்பித்து விட்டதும் இதனால் பொது மக்கள் சொல்லொண்ணா துயத்திற்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!