10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாடு முழுவதும் எஸ் எஸ் எல் சி எனப்படும்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இம்முறைத் தேர்வு எழுதியவர்களில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9,97,794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு வெளியான தேர்வு முடிவுகளில், மொத்தம் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 93.3% மாணவர்களும், 97% பேர் மாணவிகளும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.7 அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இந்த தேர்வில் 152 சிறை கைதிகள் தேர்வு எழுதினர். இதில் 110 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோல் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளுள் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு 98.53% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 98.45% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 89.98% தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. 6,100 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன.

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ்- 96.12%
ஆங்கிலம்- 97.35%
கணிதம்- 96.46%
அறிவியல்- 98.56%
சமூக அறிவியல்- 97.07%

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவுசெய்து பார்க்கலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப் பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மே 2ஆம் தேதி முதல் தங்கள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் மே 6ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையத்தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.