September 18, 2021

மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயமாக வரவேண்டியது இல்லை – தமிழக அரசு விளக்கம்!

மிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை திறக்கப்பட்டாலும் மாணவர்கள் கட்டாயமாக வரவேண்டியது இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், ‘பல மாதங்களாக மாணவர்கள் வீடுகளில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது; எனவே பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்’ என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் ஆலோசனை கேட்டு பள்ளிகளை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை 1ம் தேதிமுதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக உத்தரவிடப்பட்டது.

மேலும், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு செலுத்தாதவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி அப்துல் வகாப் என்பவர் தொடர்ந்த வழக்கு, ஐகோர்ட் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில், “கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும், மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளார்.