July 31, 2021

பள்ளிக்கூடம் பக்கம் வந்துடாதீங்க!- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

அக்டோபர்-1 ந்தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்த அரசாணையை திடீரென்று இன்று நிறுத்தி வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கொரோனா தாக்கம் குறையாத நிலையிலும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட பொது முடக்கம் 30-ந்தேதி முடிவடையும் சூழலில், அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆகிய வகுப்பு களின் மாணவ-மாணவிகள் அவரவர் பள்ளிகளுக்கு சென்று பாடம் தொடர்பான சந்தேகங் களுக்கு தீர்வு காணலாம் என கடந்த வாரம் அறிவித்திருந்தது பள்ளிக்கல்வித் துறை.

ஏற்கெனவே கடந்த சில வாரங்களாக ஆன்லைன் க்ளாஸ்களை தொடர்ச்சியாக பள்ளிகள் நடத்தி வருகின்றன. ஆன் லைன் க்ளாஸ்களில் பாடம் தொடர்பான புரிதலில் சிக்கல்கள், சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்காதது என பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான, புகார்கள், பள்ளிக்கல்வித்துறைக்கு சென்றதால்தான், பள்ளிகளுக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் கொடுக்கப்பட வேண்டுமா? அல்லது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமா? என்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அந்த சூழலில், ‘பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்கிற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ‘பெற்றோர்களின் கருத்துகளையும், மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்டறிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.