October 20, 2021

இன்றே கடைசி நாள் – மேயர், சேர்மன், தலைவர், கவுன்சிலர் பதவிக் காலம்!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்கி கடந்த 1988ம் ஆண்டு நகர்பாலிகா, பஞ்சாயத்து ராஜ் சட்டங்களை நிறைவேற்றியது. அப்போது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகள் நீங்கலாக மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிர்வாக பொறுப்பில் இருந்தனர். 1991ம் ஆண்டு அதிமுக ஆட்சி பதவிக்கு வந்தவுடன் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் கலைக்கப்பட்டன. அதன் பின் தேர்தல் நடத்தவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகம் தனி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் 1996ல் திமுக வெற்றி பெற்றதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறையும் குறித்த காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டதால் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வசம் நிர்வாக பொறுப்பு இருந்தது. தற்போது தேர்தல் ரத்து செய்து நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் 20 ஆண்டுக்கு பின் உள்ளாட்சி அமைப்புகள் அதிகாரிகள் நேரடி கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டது.

tamil oct 24

ஆம். கடந்த ஐந்தாண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் மேயர், சேர்மன், கவுன்சிலர் என்று பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களின் 5 ஆண்டு பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன.அதாவது, 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 வார்டு உறுப்பினர்கள், 12,524 கிராம ஊராட்சி தலைவர்கள், 99,324 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவி இடங்கள் இதில் வருகின்றன.இதேபோல், நகர்ப்புற உள்ளாட்சியை பொறுத்தவரை, 12 மாநகராட்சிகளில் 919 வார்டு உறுப்பினர்கள், 124 நகராட்சிகளில் 3,613 வார்டு உறுப்பினர்கள், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவி இடங்கள் உள்ளன. இன்றுடன் அவர்கள் பதவிகாலம் முடிவடைதை யொட்டி தனி அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டுக்கு நிர்வாகம் செல்கிறது. நாளை முதல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது முதல் வரி வசூல், புதிய ஒப்பந்த திட்டங்களுக்கு அனுமதியளித்தல் என பல்ேவறு பணிகளுக்கும், நிர்வாக தேவையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தனி அதிகாரியே நேநரடியாக அனுமதி வழங்கலாம். அல்லது அரசின் ஒப்புதலை பெற்று முடிவை மேற்கொள்ளலாம். அதன்படி மாநகராட்சிகளில் ஆணையர் அல்லது மாவட்ட கலெக்டர்கள் தனி அதிகாரிகளாக நியமிக்கப்படலாம். மாவட்ட ஊராட்சிக்கு கலெக்டர் தனி அதிகாரியாக இருப்பார்.

நகராட்சிகளில் அதன் ஆணையர்கள், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(ஒன்றியம்) தனி அதிகாரிகளாக செயல்படுவர். கிராம ஊராட்சிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஊராட்சி பிரிவு) தனி அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு துணையாக துணை வட்டார வளர்ச்சி அந்தஸ்திலான ஊழியர்கள் நிர்வாக பொறுப்புகளை கவனிப்பர். கிராம ஊராட்சிகளில் வரி வசூல் செய்தல், செலவீன தொகை வழங்குதல் போன்றவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரடியாக மேற்கொள்வர்.

வெளியேறும் தலைவர்கள் கிலி: தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டதால் தனி அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டுக்கு மீண்டும் நிர்வாகங்கள் செல்வது தற்போது பொறுப்பில் உள்ள தலைவர்கள் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம ஊராட்சிகளில் பல இடங்களில் அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக புகார்கள் சென்ற போதும் ஆளும்கட்சியினராக இருந்ததால் மூடி மறைக்கப்பட்டன.

தற்போது அதிகாரிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினால் அவை அம்பலமாகும். அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் பல இடங்களில் தலைவர், அதிகாரிகளிடையே மோதல் நீடித்து வந்தது. தற்போது தங்கள் வசம் நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் வருவதால் அதை சாதகமாக பயன்படுத்தி முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதால் தவறு செய்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.