September 27, 2021

போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு இறுதி வாய்ப்பு!

ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், பழை ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ – ஜியோ அமைப்பின்கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் முக்கியமான தேர்வுகள் இருப்பதால் இதை கருத்தில் கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஜனவரி 25-ம் தேதிக்குள் பள்ளிகளுக்குத் திரும்ப வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசு பல முறை வலியுறுத்தியது. இருப்பினும் இந்த அறிவுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் செவிசாய்க்கவில்லை.

பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வகை ஆசிரியர்களும் உடனடியாக இன்று (திங்கள்கிழமை, 28-1-2019 ) பணியில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்தவித, துறை சார்ந்த நடவடிக்கையும் இல்லாமல், அவர்கள் பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே பணிபுரியலாம். இன்று பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகக் கருதப்பட்டு, உத்தேச காலிப் பணியிடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பி.எட். பட்டதாரிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆனாலும் அரசின் எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் திரும்பி வருவதற்காக இன்று மாலை வரை காத்திருக்க திட்டமிட்டுள்ளதால், தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி நியமனம் இன்று இல்லை என்றும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை முதல் (செவ்வாய்க்கிழமை, 29-1-2019) துவங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வலியுறுத்தியுள்ளார்.அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிக்கல்வி இயக்குநர் இன்று மாலை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பள்ளி கல்வி இயக்குநர் கடிதத்தில், ‘நாளை காலை (செவ்வாய்க்கிழமை, 29-1-2019) 9 மணிக்குள் ஈமெயில் மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, குறுந்தகவல் மூலமாகவோ ஆசிரியர்கள் தங்கள் பணி புரியும் பள்ளிக்கு பணிக்கு வருகிறேன் என்பதை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் காலை 9 மணியளவில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அன்றைய அட்டனன்ஸ் அல்லது வருகை பதிவு செய்யப்படும். அதன் அடிப்படையில் எந்த ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்பதை மாவட்டக் கல்வி அதிகாரிகள் முடிவு செய்வார்கள். அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளைத் துவக்கலாம்.இவ்வாறு, பள்ளி கல்வி இயக்குனர் தனது கடிதத்தில் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்குனரின் அனுமதி சுற்றறிக்கை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உதவுகின்ற ஆணையாக கருதப்படுகிறது. இதன்மூலம் வேலைக்கு வராத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து அந்த இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் என்பதும் தெளிவாகியுள்ளது.