November 27, 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.- முதலமைச்சர் அறிவிப்பு!

மிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலையின் போக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ம்தேதி வரை நீடிக்கும் என்றும், தற்போதுள்ள நடமாடும் காய்கறிகள் விற்பனை தொடரும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை இதோ:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு

இந்த ஊரடங்கு மே 31 ம்தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு ஜூன் 7 ம் தேதி காலை 6- மணி வரை, மேலும் 1 வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடரும்

பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ”இவ்வாறு, அறிக்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,