தீபாவளி : எந்த வகையான பட்டாசுகளை எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் -முழுத் தகவல்!
தீபாவளி பண்டிகை வருவதற்கு ஒருமாத காலத்திற்கு முன்னரே பட்டாசு சத்தம் – குறைந்த பட்சம் குருவி வெடி அல்லது பொட்டு வெடிச் சத்தம் கேட்கத் தொடங்கிவிடும். ஆனால் சமீபத்தில் பட்டாசு வெடிப்பதற்கான ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளதை பரவலாக பார்க்க முடிகிறது. நம் தமிழக தலைநகர் சென்னையில் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ, நந்தம்பாக்கம், தீவுத்திடல் போன்ற இடங் களில் பட்டாசு கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. தீபாவளிக்கு இன்னமும் நான்கு நாட்களே உள்ள நிலையில், தற்போது வரை பட்டாசு விற்பனை சூடுபிடிக்கவில்லை எனக் கூறுகின்றனர் விற்பனையாளர்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம். தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், அதேபோல மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டாசு வெடித்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல தான் கடந்த ஆண்டும் (2018) தமிழக அரசு சார்பாக தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உலகளவில் சுற்றுச்சூழல் நலன் கருதி பசுமைப்பட்டாசு வகைகளை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா தான். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டுப்பிடிப்பான பசுமைப் பட்டாசுகள் கந்தக மற்றும் நைட்ரஜன் மாசு துகல்களை குறைவாகவே வெளியேற்றும் இதனால் காற்றில் கலக்கப்படும் மாசின் அளவு குறைந்து காற்று மாசுப்படுவது குறைக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் சூழல் உருவாகிறது.
வெடித்த பின்னர் கரியாக காற்றில் கலக்காமல் நீர்த்துளியாக மாறும் தன்மை கொண்டதும் ஒருவகைப் பசுமைப்பட்டாசுகள் ஆனால் இந்த வகைகள் முழுமையாக உற்பத்தி செய்து நடைமுறைக்கு வர இன்னமும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனும் ரபீக்ராஜா, பட்டாசின் மீதுள்ள பசுமைப்பட்டாசு எனக் குறிக்கும் முத்திரையை கொண்டு பொதுமக்கள் அதனை அடையாளம் காணலாம் என்கிறார்.
பாகுபலி வெடி, ஜல்லிக்கட்டு வெடி, பிகில் வெடி, கோல்டன் ஸ்பைடர், 4ஜி ஸ்பெக்ட்ரம், ஏரியல் அவுட் போன்ற பெரியவர்கள் வெடிக்கும் புதிய வெடி வகைகளும் ஸ்டார் சக்கரம் , ஜம்பிங் ப்ராக், ஜியான்ட் சக்கரம் , போன்ற சிறுவர்களுக்கான புதிய வெடி வகைகளும் இந்த ஆண்டு சந்தையை அலங்கரிக்கிறது.
அதே நேரம் தரமில்லாத பட்டாசு வகைகளும் பல இடங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரிக்கும் விற்பனையாளர்கள் முறையாக ஜிஎஸ்டி உடன் உள்ள பில் கொடுக்கும் விற்பனையாளர்களிடம் பட்டாசு வாங்கும் போது தரமில்லாத பட்டாசுகளை தவிர்க்க முடியும் எனவும் எச்சரிக்கின்றனர் .
அதே சமயம் நேற்று, மத்திய அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சீன நாட்டு பட்டாசுகளை விற்கவும் கூடாது, அதை வாங்கவும் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விதியை மீறி சட்டவிரோத சீன நாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.
சுங்க சட்டம் 1962 இன் கீழ் சீன நாட்டு பட்டாசுகளை இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ கூடாது. மீறினால் அது தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக்கும்