பிரதமர் மோடியிடம் தமிழக கவர்னர் பேசியது என்ன?

தமிழகத்தில் அடுத்தடுத்து போராட்ட களமாகி வரும் சூழலி பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசினாராம். அதிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இச்சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஏப்ரல் 5-ஆம் தேதி அக்கட்சிகள் சார்பில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த தமிழக போராட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் எழுந்துள்ள சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் டெல்லி சென்றார். நேற்று- செவ்வாய்க்கிழமை காலையில் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த இருவருடனான சந்திப்பின் போது, தமிழக அரசியல் சூழல், சட்டம், ஒழுங்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மாநிலத்தில் நடைபெற்று வரும் முக்கிய கட்சிகளின் போராட்டங்கள் ஆகியவை குறித்து ஆளுநர் விளக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் ராஜ்நாத் சிங்கை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்த ஆளுநர் பன்வாரிலாலை மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் வா.மைத்ரேயன் நேரில் சந்தித்தார். இது குறித்து மைத்ரேயன் கூறுகையில், ‘மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்தேன்’ என்றார். இந்நிலையில், மாலை 4 மணியளவில் ஆளுநரை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை தெரிவித்தார்.

ஆனாலும், மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற  பொறுப்பை மோடி-கொடுத்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து உடனடியாக சென்னை திரும்பிய ஆளுநர், உடனடியாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி உள்ளிட்ட சில அதிகாரிகளை ஆளுனர் மாளிகைக்கு அழைத்து பேசினாராம். அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை தொடக்கத்திலேயே ஏன் ஓடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினாராம். மேலும், இந்த விஷயத்தில் தமிழக அரசு மென்மையாக நடந்து கொள்கிறது எனவும், உடனடியாக போராட்டங்களை அடக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாராம்.