ஹார்வர்ட் பல்கலை தமிழ் இருக்கை: தேவையான நிதி கிடைத்துவிட்டது – அமைச்சர் க. பாண்டியராஜன்

ஹார்வர்ட் பல்கலை தமிழ் இருக்கை: தேவையான நிதி கிடைத்துவிட்டது – அமைச்சர் க. பாண்டியராஜன்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்குத் தேவையான 40 கோடி ரூபாய் நிதி கிடைத்திருப்பதாக அமைச்சர் மாஃபா க. பாண்டியராஜன் தெரிவித்தார்.

உலகில் உள்ள பழமையான பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகமும் ஒன்று. இந்த பல்கலைக்கழகத்தில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கென தனி இருக்கை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டிய மொத்த ஆதார நிதி ரூ.40 கோடியாகும். எனவே, நிதி திரட்டும் முயற்சியில் தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும் ஈடுபட்டிருந்தனர். அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழ் இருக்கை அமைய நிதியுதவி அளித்து வந்தனர். அதன்படி, தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், தமிழ் மொழி ஆர்வலர்கள், திரைப் பிரபலங்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கு தேவையான மொத்த ஆதார நிதியான ரூ.40 கோடி கிடைத்துள்ளது என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவையான முழுமையான நிதி உறுதி செய்யப்பட்டது. தமிழ் இருக்கை அமைக்க தேவையான ரூ.40 கோடி நிதி கிடைத்துள்ளது. ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்கு 26 நாடுகளில் இருந்து 9,000 பேர் நிதியுதவி அளித்துள்ளனர் என்றார்.

முன்னதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்புக்குழுத் தலைவர் மருத்துவர் வி. ஜானகிராமன், ஹார்வர்டு தமிழ் இருக்கை உருவாக்கத்தில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது, 382 ஆண்டுகள் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த 38 பேர் பிரதமர்களாக, குடியரசுத் தலைவர்களாக பணியாற்றியுள்ளனர். 43 பேர் நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர். 43 பேர் சிறந்த எழுத்தாளர்களாக உள்ளனர்.இத்தகைய பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அணுகப்பட்டது. அப்போது ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க ரூ. 40 கோடி நிதி வேண்டும் என்று தெரிவித்தனர்.

இப்பல்கலைக்கழகம் எதை முன்னெடுத்துச் சென்றாலும் அது உலகம் முழுவதும் பிரசித்தி பெறும். அதேபோல, தொன்மையான தமிழ்மொழியை ஹார்வர்டு பல்கலைக்கழகம் முன்னெடுத்துக் கூறினால் தமிழ்மொழி மேலும் வளர்ச்சி அடையும் என்று மருத்துவர் வி. ஜானகிராமன் தெரிவித்தார். ஏற்கெனவே, தமிழ்மொழிக்கு அமெரிக்கா – கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லின் பல்கலைக்கழகத்தில் இருக்கை உள்ளது. இது தவிர மெக்சிகோ, சிகாகோ, கொலம்பியா உள்பட 6 இடங்களிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தது.

Related Posts

error: Content is protected !!