ஜல்லிக்கட்டுக்காக டெல்லி பயணம்- மகிழ்ச்சி = ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

ஜல்லிக்கட்டுக்காக  டெல்லி பயணம்- மகிழ்ச்சி =  ஓ.பன்னீர்செல்வத்திற்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது  குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.போராடி கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.மாணவர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரநிதிகளுடன் சென்று பிரதமரை, முதலமைச்சர் சந்திப்பது ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும்” என்று கூறியுள்ளார்.

jalli jan 18

முன்னதாக முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தின் பண்டைய பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றின் பிரதிபலிப்பே ஜல்லிக்கட்டு என்பது ஒவ்வொரு தமிழனின் எண்ணமாகும். தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றிணைந்தது ஜல்லிக்கட்டு. எனவே தான், ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில் தங்களது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில் மாணாக்கர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் உணர்வுகளை உணர்வதோடு மட்டுமல்லாமல், அந்த உணர்வின் அங்கமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே தான், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென பாரத பிரதமரையும், மத்திய அரசையும் தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தடை செய்து பல்வேறு நீதிமன்றங்கள் உத்தரவிட்டு வந்துள்ளன. எனினும், இடைக்கால ஆணைகளின்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதியாக 7.5.2014 அன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 19.5.2014 அன்று தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவினையும் உச்ச நீதிமன்றம் 16.11.2016 அன்று தள்ளுபடி செய்து விட்டது. உச்ச நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்ட காரணத்தால், மத்திய அரசின் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொண்டால் தான், ஜல்லிக்கட்டு நடத்திட முடியும் என்பதால் ஜெயலலிதா மத்திய அரசிடம் இது குறித்து வலியுறுத்தி வந்தார்.தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி 11.1.2017 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளேன். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தற்போது மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் 7.5.2014 அன்றைய தீர்ப்பின் காரணமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலாது என்பதால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான சட்டபூர்வ நடவடிக்கையை எடுத்திட வேண்டுமென்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது.

7.8.2015 அன்று ஜெயலலிதா, பாரதப் பிரதமருக்கு அளித்த கோரிக்கை மனுவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். 11.7.2011 நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்தப்படும் விலங்காக சேர்க்கப்பட்டுள்ள காளைகளை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கிட வேண்டும் என்றும் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் விதமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.

2015-ஆம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.ஜெயலலிதா ஆணையின்படி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத் தொடரில் பேசியிருந்தனர். எனினும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததால், ஜெயலலிதா 22.12.2015 அன்று பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த வகை செய்யும் அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதாவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப் படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது. அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது. எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, தான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி, அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிக்க வேண்டுமென்று ஜெயலலிதா கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர், அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவாலும், தமிழக அரசாலும், என்னாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மோடியை 19.12.2016 அன்று நேரில் சந்தித்த போது தமிழ்நாட்டின் நலனுக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நான் அளித்தேன். அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என வற்புறுத்தி இருந்தேன். 9.1.2017 அன்று பிரதமருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் விதமாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திடும் வகையில், 7.1.2016 அன்று மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையை எதிர்த்து Compassion Unlimited Plus Action, People for Ethical Treatment of Animals India, Federation of Indian Animal Protection Organisations (FIATO) உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தன. இதில் தமிழ்நாடு அரசு வலுவான வாதங்களை எடுத்துரைத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணாக்கர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்பதிலும், அதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரியம் காக்கப்படவேண்டும் என்பதிலும் எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்படுவதற்கு ஏதுவாக நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கைகளை எடுத்தது தமிழக அரசு தான். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது என்பதற்கான வலுவான வாதங்களை தமிழக அரசு எடுத்து வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்கு சாதகமாக அமையும் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் எனில், உச்ச நீதிமன்றம் நமக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கிட வேண்டும். இந்த தீர்ப்பிற்கு முன்னதாகவே ஜல்லிக்கட்டு நடத்திடவேண்டுமெனில் அதற்குரிய சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. மாநில அரசு இதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

நமது உரிமைகளை நிலைநாட்ட, பாரம்பரியத்தை காத்திட, உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திட, அறவழியில் மாணாக்கர்களும் பொதுமக்களும் மேற்கொண்டுள்ள போராட்டங்கள் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. தமிழர்களின் உணர்வுகளோடு ஒன்றியுள்ள தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்திடும் என்ற உத்தரவாதத்தினை நான் அளிக்கிறேன்.நாளை காலை புதுடெல்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தினை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!