October 2, 2022

தமிழறிஞர்களிடையே உள்ள நயம், சுவை, நகைச்சுவை, சொல்லாற்றல்!- ஓ. பி.எஸ். பகிர்வு

தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில், திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும் மேலும், அண்ணா விருது கவிஞர் கூரம் மு.துரைக்கும், காமராஜர் விருது டி. நீலகண்டனுக்கும் பாரதியார் விருது முனைவர் ச. கணபதிராமனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், திரு.வி.க. விருது போராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கும் வழங்கப்பட்டது.

ops jan 15

விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிஞர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். நிகழ்வில் பேசிய அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றிய விசயங்களை உருக்கமாக நினைவு கூர்ந்தார். மேலும் தமிழர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சி பற்றியும் அவர் பேசினார்.

விழாவில் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியது:

“இன்றைக்கு வழங்கப்படும் விருதுகள் நம் தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விருதுகள். இம்மையிலும், மறுமையிலும் நன்மை தரக்கூடிய செய்திகளை இரண்டே வரிகளில் தந்து, தனிப்பெரும் இடத்தைப் பெற்ற தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெயரில் விருது; பாட்டுத் திறத்தால் நாட்டுணர்ச்சியை ஊட்டி எழுப்பியதோடு, தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கு உணர்த்திய தேசியக் கவி, புரட்சிக் கவி, மகாகவி பாரதியார் பெயரில் விருது; சமூகக் கருத்துகளை அறவழியில் நின்று, அகிலத்திற்கு உயர்த்திச் சொன்ன பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் விருது; மக்களின் உயர்வே தன் உயர்வு என்று நினைத்து நெறிசார்ந்த வாழ்வு வாழ்ந்த திரு.வி.க. பெயரில் விருது; ஒழுக்கமும், நேர்மையும் எனது கேடயம், நேர நிர்வாகமே எனது வெற்றி என்று வாழ்ந்த கி.ஆ.பெ. பெயரில் விருது; சமூக சீர்திருத்தத்திற்காகவும், மூட நம்பிக்கைளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார் பெயரில் விருது; கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற உயரிய குறிக்கோள்களை அளித்த பேரறிஞர் அண்ணா பெயரில் விருது; அடித்தளத்து மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் பெயரில் விருது; கல்விக் கண் திறந்து, தொழிற் புரட்சியை ஏற்படுத்திய கர்மவீரர் காமராஜர் பெயரில் விருது என பல்வேறு விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.

இந்த இனிய நன்னாளில், புலவர் பா. வீரமணிக்கு திருவள்ளுவர் விருதினையும்; பேராசிரியர் முனைவர் ச.கணபதிராமனுக்கு மகாகவி பாரதியார் விருதினையும்; கவிஞர் கோ.பாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதினையும்; முனைவர் மறைமலை இலக்குவனாருக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருதினையும்; மீனாட்சி முருகரத்தினத்துக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினையும்; கவிஞர் கூரம் மு.துரைக்கு பேரறிஞர் அண்ணா விருதினையும்; டி.நீலகண்டனுக்கு பெருந்தலைவர் காமராசர் விருதினையும்; பண்ருட்டி ச.ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருதினையும்; மருத்துவர் இரா.துரைசாமிக்கு அண்ணல் அம்பேத்கர் விருதினையும், இந்த மேடையிலே நான் வழங்குவதிலும்; அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்குவதிலும் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

“இறைவன் ஒருவன் உண்டு” என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். ஆனால், கடவுளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரிட்டு அழைப்பர். ஆனால், வள்ளுவர் ஒரு பக்கமும் சாராது, ‘இறை’ என்றும், ‘ஆதிபகவன்’ என்றும், ‘எண்குணத்தான்’ என்றும் அழைப்பார். அதனால் தான், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் செம்மையாக உணர்த்தும் திருக்குறள் ஒரு நாட்டினருக்கோ, ஒரு மொழியினருக்கோ, ஒரு மதத்தினருக்கோ மட்டும் அல்லாமல், உலகம் போற்றும் பொதுமறை நூலாக கருதப்படுகிறது. தமிழ் மொழியிலுள்ள அற நூல்கள் யாவற்றிலும் மிகச் சிறந்த நூல் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். இதனால் தான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று போற்றிப் பாடினார் மகாகவி பாரதியார்.

“தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்

அள்ளுதொறுஞ் சுவை உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம்

கொள்ளும் அறம் பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்த

திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதேபுகழ் வையகமே!”

என திருவள்ளுவரின் சிறப்பை போற்றிப் பாடியுள்ளார் பாவேந்தர் பாரதிதாசன்.

“நூல்களிலே பல கோவை உண்டு, ‘திரு’ சேர்ந்த கோவை ஒன்றே ஒன்று தான். அது திருக்கோவை. பதிகள் பல உண்டு. ஆனால் ‘திரு’ சேர்ந்த பதி ஒன்றே ஒன்று தான். அது திருப்பதி. வாசகம் பல உண்டு, ஆனால் ‘திரு’ சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று தான். அது திருவாசகம். குறள் பல. ஆனால் ‘திரு’ சேர்ந்த குறள் ஒன்று தான். அது தான் திருக்குறள். வள்ளுவர் என்றால் பலரைக் குறிக்கும். ‘திரு’ சேர்ந்த அந்த பெயருக்கு உரியவர் ஒருவர் தான். அதைப் பெற்ற வள்ளுவர் திருவள்ளுவர்.” என திருவள்ளுவரின் சிறப்பை “வள்ளுவரும் குறளும்” என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார் கி.ஆ.பெ. விசுவநாதம்.

“திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார்” என்று பேரறிஞர் அண்ணா கூறி இருக்கிறார்.

“திருவள்ளுவர் காலம் பொதுவுடமைக் காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால் வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார்.” என்று தந்தை பெரியார் தான் நடத்திய திருக்குறள் மாநாட்டில் திருவள்ளுவரைப் போற்றி உரையாற்றி இருக்கிறார்.

இப்படி தமிழ் அறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் போற்றப்பட்ட, சிறப்பு வாய்ந்த திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவர் தினமான இன்று தமிழ் அறிஞர்கள் மற்றும் பெரியோர்கள் பெயர்களினாலான விருதுகளை வழங்குவது எனக்கு கிடைத்த பெறும் பேறு என்று நான் கருதுகிறேன்.

திருவள்ளுவர் அரசியல் நெறியை இறைமாட்சி என்னும் தொடரால் அழகாகக் கூறுகிறார். அரசியல் நெறி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை, “அறநெறி தவறாமல், குற்றமேதும் இழைக்காமல், வீரத்திலும், மானத்திலும் குறைவில்லாது ஆட்சி நடத்துபவரே சிறந்த அரசன்” என்கிறார் திருவள்ளுவர். இந்த அற நெறிகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்து, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டிய பெருமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சாரும்.

ஈகை என்ற அதிகாரத்தில் “ஒன்றும் இல்லாத ஏழை, எளியவர்களுக்குக் கொடுப்பதே ஈகை. மற்றவர்களுக்குக் கொடுப்பது ஒரு பயனை எதிர்பார்த்துச் செய்வதாகும்” என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவரின் இந்த அறநெறிக்கு ஏற்ப, அனைவருக்கும் விலையில்லா அரிசி, மானிய விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற மளிகை பொருட்கள், ஏழைகள் வயிறார உண்ண அம்மா உணவகங்கள், குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள், அம்மா மருந்தகங்கள் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் என மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் பேணுநர் இல்லாதோருக்கு \மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம், ஏழை பெண்களுக்கு 50,000 ரூபாய் வரை திருமண நிதி உதவி மற்றும் எட்டு கிராம் தாலிக்கு தங்கம், ஏழைத் தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி, கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவைப் பசுக்கள் மற்றும் செம்மறியாடுகள், அம்மா குடிநீர், முதியோர்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, என பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி ஈகையின் பிறப்பிடமாகத் திகழ்ந்தவர் அவர்.

கல்வி என்ற அதிகாரத்திலே, “ஒருவனுக்கு எந்த வகையிலும் அழிவே இல்லாத சொத்து கல்விதான். பொன்னும், பொருளும் கல்வியின் முன்னால் ஒரு பொருட்டே அல்ல.” என்றார் திருவள்ளுவர்.

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்’ என்றார் பாரதியார்.

அந்த வழியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழை, எளிய மாணவ மாணவியருக்கு கட்டணமில்லாக் கல்வி, ஊக்கத் தொகை, விலையில்லா புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்து வசதி ஆகியவற்றை வழங்கி அனைவரும் கல்வி கற்க வழிவகை செய்தார்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் பல்நோக்கு மருத்துவமனை வரை சிறப்பான மருத்துவ வசதிகளை உருவாக்கியதுடன், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற வழிவகுத்தவர் அவர்.

மேலும், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி மற்றும் மகளிருக்கு விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் போன்ற பல திட்டங்களையும் செயல்படுத்தி வள்ளுவர் வாக்கிற்கிணங்க நோயற்ற சமுதாயத்தை உருவாக்க முனைந்தவர் அவர்.

இதேபோன்று, “குற்றங்களை ஆராய்ந்து எந்தவிதப் பாகுபாடுமின்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்லாட்சி முறை” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, சட்டத்தின் ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்டியவர். தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலை மற்றும் கலாச்சாரத்தையும் பேணிக் காப்பதில் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை. தமிழக வரலாற்றில் எவரும் செய்யாத ஏற்றமிகு சாதனையை படைத்தவர் அவர் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பயணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய பழம்பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு, பிற மொழிகளுக்கு இல்லாத பல சிறப்புகள் உண்டு. சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை ஊக்குவித்த, வளர்த்த, தமிழ் அறிஞர்களையும், ஆர்வலர்களையும் பாராட்டுவதிலும், போற்றுவதிலும், கௌரவப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் வேறு யாருமில்லை.

திருவள்ளுவர் பெயரில் விருதை அறிமுகப்படுத்தியவர் அவர். திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை இயற்ற வழிவகை செய்தவரும் அவரே. திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர். கபிலர், கம்பர், உ.வே.சா., ஜி.யு.போப், உமறுப் புலவர், இளங்கோவடிகள் ஆகியோர் பெயர்களில் விருதுகள், சொல்லின் செல்வர் விருது எனப் பல புதிய விருதுகளை அறிமுகப்படுத்தி தமிழறிஞர்களை கௌரவப்படுத்தியவர். திருக்குறளை சீனம், அரபு மற்றும் கொரிய மொழிகளில் மொழி பெயர்க்க வழிவகுத்தவரும், எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திக் காட்டியவரும் அவர்தான். தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தது அதிமுக அரசு. இன்னும் சொல்லப்போனால், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவ வித்திட்டதே அதிமுக அரசுதான்.

இந்த இனிய விழாவிலே தமிழ் அறிஞர்களிடையே உள்ள நயம், சுவை, நகைச்சுவை, தமிழ் மொழியில் உள்ள சொல்லாற்றல் ஆகியவற்றை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கம்பராமாயணத்தை இயற்றியவர் கம்பர். இவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை புகழ்ந்து 100 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் எழுத, மற்றப் புலவர்கள் 1000-க்கு ஒரு பாட்டில் சடையப்ப வள்ளலை புகழ்ந்தால் போதும் என்று கூறினர். இதைக் கம்பர் மறுக்கவில்லை. மாறாக, “சடையப்ப வள்ளல் 100-ல் ஒருவர் தான் என்று நினைத்தேன். ஆனால் நீங்களோ 1000-ல் ஒருவர் என்கிறீர்கள். அப்படியே செய்கிறேன்” என்று கூறி ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் சடையப்ப வள்ளலை புகழ்ந்து பாடினாராம் கம்பர். ஆக வள்ளல் என்றாலே அவர், ‘ஆயிரத்தில் ஒருவன்’ தான் என்று இன்றைக்கும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் கி.வா.ஜ. என்னும் மாமனிதர். அவர் ஒரு முறை தன் நண்பருடன் ஒரு வீட்டிற்கு சாப்பிடச் சென்றிருந்தார். அந்த வீட்டு உரிமையாளர், அவரை உபச்சாரம் அதிகமாகச் செய்வதாக நினைத்து மாற்றி, மாற்றி பாயசம் ஊற்றிக் கொண்டே இருந்தார். அசந்து போன கி.வா.ஜ. அவர்கள், “ஒருவரைக் கொல்ல பாய்சன் தான் தேவை என்று நினைத்தேன். பாயசத்தாலேயும் கொல்ல முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள்” என்று நயம்படக் கூறினாராம்.

இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கவிஞர் கண்ணதாசன். இவர் கவிஞர் மட்டுமல்ல, அரசியலிலும் பயணித்தவர். ஒரு முறை இவர் காங்கிரஸ் கட்சியில் சேர நினைக்கிறார். பெருந்தலைவர் காமராஜரின் அனுமதிக்காக காத்திருக்கிறார். அதை ஒரு சினிமாப் பாடலில் “அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி” என்று பல்லவியாக்கினார்.

கவிஞர் கண்ணதாசன் காங்கிரசில் சேர்ந்த பிறகு, பேரறிஞர் அண்ணா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது, “நலம் தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலம் தானா? என்ற பாடல் மூலம் அண்ணாவின் உடல் நலத்தை விசாரித்தாராம்.

இப்படி, எந்தக் காலத்திலும், எந்தச் சொல்லை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட்ட தமிழ் அறிஞர்கள் உணர்ச்சிபூர்வமாக, அறிவுப் பூர்வமாக, நகைச்சுவையுடன், நல்ல பல கருத்துகளை, நயம்பட, தாய் மொழியாம் தமிழ் மொழி மூலம் பரப்பி வந்தார்கள். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களது பெயரில் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அறிஞர்களின் பெயர்களில் மட்டுமல்லாமல், சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களை தட்டி எழுப்புவதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த தலைவர்களின் பெயர்களிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒருமுறை, மகாத்மா காந்தியும், அண்ணல் அம்பேத்கரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். மகாத்மா காந்தி தனது வேலைகளை குறித்த நேரத்தில் செய்து, நேரத்தில் உண்டு, நேரத்தில் உறங்குபவர். அன்று அவர் குறித்த நேரத்தில் படுக்கவும் செய்தார். அம்பேத்கர் மட்டும் விளக்கை வைத்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டு இருந்தார்.

இதைப் பார்த்த காந்திஜி, “விளக்கை அணைத்துவிட்டு உறங்கச் செல்லுங்கள், எந்த வேலையிருந்தாலும் காலையில் செய்து கொள்ளலாம்” என்று அம்பேத்கரிடம் உரிமையுடன் சொன்னார்.

“இல்லை, பாபுஜி, எனக்கு நிறைய வேலை இருக்கிறது. தயவு செய்து நீங்கள் உறங்குங்கள்” என்றார் அண்ணல் அம்பேத்கர்.

“எனக்குக் கூட நிறைய வேலைகள் இருக்கின்றன. இருந்தாலும் உறக்கம் வந்ததும் உறங்கிவிட வேண்டும். உடம்புக்கு அதுதான் நல்லது” என்றார் காந்திஜி.

இதற்கு பதிலளித்த அண்ணல் அம்பேத்கர், “எனக்கு எப்படி உறக்கம் வரும்? என் மக்கள் யாவரும் விழிக்கவில்லை. தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று நயமாக காந்திஜியிடம் விளக்கினார்.

அதாவது, அறியாமை உறக்கத்தில் இருந்த பல கோடி ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்ப தனது உறக்கத்தை துறந்த உன்னத மனிதர் பாபாசாகிப் அம்பேத்கர். அவரது பெயரில் இன்று விருது வழங்கப்படுகிறது.

இதுபோன்ற விழாக்கள் மக்களிடையே, குறிப்பாக, இளைய சமுதாயத்தினரிடையே, தமிழ் மொழியை ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற ஒரு அவாவினை ஏற்படுத்துவதோடு, நாமும் தமிழ் அறிஞராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தையும் அவர்களின் மனங்களில் நிச்சயம் ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், எல்லோரும் ஓர் நிறை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும்.

தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், சமுதாயத் தலைவர்களும் நல்ல பல கருத்துகளை தமிழ் மக்களிடையே பரப்பி, தமிழ் மொழி வளர்ச்சியடையவும், மேன்மை பெறவும், தமிழ் மாநிலம் முதன்மை மாநிலமாகத் திகழவும் வழிவகுக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.