April 11, 2021

எல்லாம் மேலே இருக்கறவனுக்குதான் தெரியும்!- முதல்வர் பேட்டி வீடியோ!

மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும். அதே சமயம் கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, வேளச்சேரியில் இன்று (ஜூன் 20) முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசிய போது, “கொரோனா வைரஸ் ஒரு புதிய நோய். ஆரம்பத்தில் வெளி நாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களிடத் தில்தான் இந்தத் தொற்று கண்டறியப் பட்டது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவர்களின் கடும் முயற்சியின் காரணமாக செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறை யிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அவர்கள் முயற்சியால் இன்று குணமடைந்தவர்களின் சதவீதம் 54 சதவீதமாக உள்ளது. நோயின் அறிகுறி இருக்கின்றவர்கள் வெளியே சென்றால், மற்றவர்களுக்கும் பரவிவிடும். எனவே ஊரடங்கு மூலமாக வெளியில் செல்வதை தடுத்து தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.

அதோடு வீடு வீடாக சென்று மாநகராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள், சுகாதாரத் துறை இணைந்து நோய் அறிகுறி இருக்கின்றதா என்று பரிசோதனை நடத்தி வருகின்றார்கள். அதில் யாருக்கும் நோய் தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதற்கு இந்த ஊரடங்கு பயன்படுகின்றது.

இந்த ஊரடங்கு என்பது யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல. யாரையும் சோதனைக்கு உள்ளாக்குவதற்கு அல்ல. பரவலைத் தடுப்பதற்குத்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். வீடு, வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு இந்த ஊரடங்கு பயன்படுகிறது. ஆங்காங்கே 300 காய்ச்சல் மையங்கள் அமைக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படுகிறது. இது 450 ஆக அதிகரிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

இத்தனைக்கும் கொரோனா நோயாளிகளை யாரும் ஒதுக்கி வைக்கப் படுவது கிடையாது. மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும். ஆனா அதை குணமடைய செய்வது அரசின் கடமை. இதுக்கு தான் மருத்துவ நிபுணர்கள்,உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை சொல்லுது முகக்கவசம் போடுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்க, வெளியில் செல்கின்ற போது கை, கால்களை சுத்தமாக தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். கழிப்பறையை சுத்தமா வைத்துக்கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் நோய் வந்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் ? என்று தத்ரூபமா ஊடகத்தின் வாயிலாக தினந்தோறும் காட்டுகின்றோம். முக்கிய நடிகர்களை வைத்தும், பிரபலங்களை வைத்து குறும் படங்களை வெளியிடுகின்றோம்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுமா?

வசதி இல்லாதவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வசதி இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். பரிசோதனையும் செய்துகொள்ளலாம்.

ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுமா?

இதுவரை அதற்கான வாய்ப்பு இல்லை.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா?

அவரே இல்லை என்று பேட்டியளித்துள்ளார்.

கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும்?

இறைவனுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? நாம் மருத்துவர்கள் கிடையாது. படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்கின்றனர். தடுக்கத்தான் முடியும், ஒழிக்க முடியாது என நிபுணர்கள் சொல்கின்றனர். முகக்கவசம், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள்தான் அரசாங்கம். அரசாங்கம் எனத் தனியாக இல்லை. மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதே?

அந்த மருந்து அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும்.