September 23, 2021

உலக முதலீட்டாளர் இரண்டாம் மாநாடு சக்சஸ்.. சக்சஸ்.. சக்சஸ்! – முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

உலக முதலீட்டாளர்கள் இரண்டாவது மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இன்று மாலை 3 மணிக்கு நடைபெற்றன. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார். முன்னதாக மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில், தமிழக அரசுடன் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அவற்றுள் சில:

* அதானி குழுமத்துடன் ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

* சிபிசிஎல் நிறுவனத்துடன் ரூ. 27,400 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

* என்.எல்.சி.நிறுவனத்துடன் ரூ. 23,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

* ஐசெர் நிறுவனத்துடன் ரூ. 1,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

* எம்ஆர்எஃப் நிறுவனத்துடன் ரூ.3,100 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

* பிஎஸ்ஏ நிறுவனத்துடன் ரூ.1,250 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

* சாய் பல்கலைக்கழகத்துடன் ரூ. 580 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது

*அலைன்ஸ் நிறுவனத்துடன் ரூ.9,488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

* எம்.எஸ்.எம்.இ என்ற 12,000 சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.30,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது

இதன் பின்னர் இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவில் முதலமைச்சர் பழனிசாமி பேசும்போது, “புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடனும், அவர்களுடைய தொலை நோக்கு திட்டம் 2023-ன் படியும், அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இன்று, 2 நாட்கள் நடந்த 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடு களால் தமிழகத்தில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது.

304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.3.42 லட்சம் கோடி முதலீடு கையெழுத்தானது .

தொழில் நிறுவனங்கள் முதலீடு மூலம் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த இரு நாள் மாநாட்டில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அதனை சிறப்பாக வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ”என்று, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

இம்மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பேசும் போது, “தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி.

தொழில்திறன் மிக்க தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாநிலம் தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகம் வாகனம், தொலைத்தொடர்பு, உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கிறது. தரைவழி, ஆகயவழி, கடல் வழி என அனைத்து துறையிலும் முன்னணி வகிக்கிறது. மத்திய- மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும்.

தமிழகத்தில் திறமையாக, கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் ஏராளமாக உள்ளனர். ஒட்டு மொத்த இந்தியாவும் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் தத்துவம் ஆகும். மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளி நாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன” என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார்.

அடிசினல் ரிப்போர்ட்:

உலக முதலீட்டாளர் மாநாட்டை மாயமான் காட்சி என திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அதிமுக தேர்தல் மாநாடாக மாற்றி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

2015ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவை கானல் நீராகிப் போனதாக சாடியுள்ளார். நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் 0.79 விழுக்காட்டை மட்டுமே தமிழகம் பெற்று இருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், தற்போது போடப்பட்டுள்ள 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு விவரங்களும் வெளிவந்த பிறகுதான் அவை செயல் வடிவத்திற்கானதா அல்லது அலங்கார புளுகுக் கணக்குக்கானதா என்பது தெரிய வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.