September 17, 2021

அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் ! – எடப்பாடியார் நம்பிக்கை!

நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் அ.தி.மு.க. அரசு இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் பூனைகள் கூடி யானையை அசைக்க முடியாது என்றும் முதல்வர் ஆவேசமாக பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஓராண்டு பூர்த்தியானதை தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சி…

முன்னதாக அரசின் சாதனை விளக்க கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் முதல்வர் பழனிசாமி சுற்றிப் பார்த்தார். அமைச்சர்களும் கண்காட்சியை சுற்றிப் பார்த்தனர். அதை தொடர்ந்து சாதனை மலரை முதல்வர் வெளியிட அதை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்களும் வரிசையாக சாதனை மலரை பெற்றுக் கொண்டனர். பின்னர் நடந்த விழா கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

எடப்பாடியார் பேசும் போது,“மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த பாராட்டுதல்களை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றி வருகிறோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு ஆண்டில் 17 ஆயிரத்து 619 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 38 ஆயிரத்து 339 பணிகளை தொடங்கி வைத்தும், 14 ஆயிரத்து 476 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 408 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்துள்ளோம்.

இன்றைக்கு எதிர்க்கட்சிக்காரர்களும் புதிதாக முளைத்திருக்கின்ற கட்சிகளும், இந்த ஆட்சியில் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள்?. அந்தத் திட்டத்தினால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ திட்டங்களை எந்தவித பெரிய விளம்பரமோ, ஆடம்பரமோ இல்லாமல் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அரசு செய்து வருகிறது.

மக்கள் எங்கள் பொற்கால ஆட்சியின் வெற்றிப்போக்கை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எது ஒப்பனை இல்லாத உண்மை முகம். எது அரிதாரம் பூசி நடிக்கிற போலி முகம் என்பது மக்களுக்குத் தெரியும். இந்த ஆட்சியைக் குறை சொல்வதன் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். எங்களை வைத்து விளம்பரம் தேடிக் கொள்ள நினைப்ப வர்களை அதே விளம்பரம் அழித்துவிடும். ஆதாயம் தேடி அரசியலுக்கு வர நினைப்பவர்கள், முள்செடிகளைப் போன்று முளைத்த பிறகு கருகி காணாமல் போவார்கள். ஒரு சிறிய அரசியல் சூறாவளிக்குக்கூட தாக்குப் பிடிக்க முடியாத பல கட்சிகள் விரைவில் காணாமல் போகும். ஏதோ ஒரு மாயையில் திசைமாறிப்போன ஜெயலலிதாவின் தொண்டர்கள் தங்கள் தாய்வீட்டை நோக்கி நிச்சயம் வருவார்கள். வந்து ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்குவார்கள்.

காடு ஒன்றில் விலங்குகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு நரிக்கு அது பிடிக்கவில்லை. விலங்குகள் அனைத்தையும் காட்டை விட்டு தந்திரமாக விரட்டிவிட்டு தான் மட்டும் சுதந்திரமாக வாழ நினைத்தது. நரியின் கெட்ட எண்ணத்திற்கு ஒரு ஓநாயும் ஆதரவு தெரிவித்தது. ஒருநாள் நரியும், ஓநாயும் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது எதிரில் ஒரு கரடி வந்தது. கரடிக்கு ஓட்டை வாய். எதைச் சொன்னாலும் ஊரெல்லாம் சொல்லும் கரடியை பயன்படுத்திக் கொள்ள நரி நினைத்தது.

அதன்படி, கரடியாரே காட்டுக்குள் சுனாமியும், சூறாவளியும் வரப்போகிறது. காடு அழியப் போவதால் நானும், ஓநாயும் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னது. உடனடியாக கரடி இந்த செய்தியை அனைத்து விலங்குகளிடம் தெரிவித்தது. உடனே அனைத்து விலங்குகளும் பீதியுடன் காட்டை விட்டு வெளியேறத் தொடங்கின. இதை மலையின் உச்சியிலிருந்து நரியும் ஓநாயும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன.

இதற்கிடையே ஓநாய் ஒரு சதித் திட்டம் தீட்டி, நரியை ஒழித்து விட்டு, தானே ராஜாவாக வாழ நினைத்தது. அப்பொழுது அவ்வழியே வேடன் ஒருவன் வந்தான். வேடனைக் கண்டவுடன் ஓநாய் அருகில் இருந்த புதரில் மறைந்தது. வேடன் வலையை விரித்து அங்கிருந்த நரியை பிடித்துக் கொண்டான். நரியிட்ட கூச்சலைக் கண்டுக் கொள்ளாமல் ஓநாய் அந்த இடத்தை விட்டு தப்பித்தது. அனைத்து விலங்குகளும் கூட்டமாக ஒற்றுமையுடன் வாழ்ந்திருந்தால் ஆபத்தான நேரத்தில் கண்டிப்பாக யாராவது உதவியிருப்பார்கள் என கூடி வாழ்தலின் பெருமையை நரி அப்போது உணர்ந்தது.

எனவே நாம் நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து பாடுபட்டால் ஜெயலலிதாவின் அரசே இன்னும் நூறாண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.