வீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்!

வீடுதேடி வரப் போகுது ரேஷன் – முதல்வர் பழனிசாமி தொடங்கி வச்சிட்டார்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (21–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 6 குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை வழங்கினார்.

புரட்சித் தலைவி அம்மா கடந்த 24.2.2014 அன்று சென்னையில் நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மக்கள் எளிதில் அணுக இயலாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது 48 நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் 277 கிராமங்கள் மற்றும் சென்னையில் 54 தெருக்களில் வசிக்கும் 27,420 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், திருப்பூர், திருச்சி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மலை கிராமங்கள் பயன் பெறுகின்றன.

5 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயன்

இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில், முதலமைச்சர் 20.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு தரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூபாய் 9.66 கோடி மதிப்பீட்டில் துவக்கப்படும்” என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 37 ஆயிரத்து 315 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை முதலமைச்சர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாதம் ஒருமுறை வரும்

இந்த நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலம், மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர் களுக்கு வசதியான, அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், தாய் கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வார்.

https://twitter.com/aanthaireporter/status/1307905253833015296

மேலும், பொது விநியோக திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக முதலமைச்சர் இன்று 6 குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை வழங்கினார்.

ஊட்டச்சத்து அரிசி

செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்ட சத்துக்களை கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த அரிசியாகும். இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உட்பட அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ரத்த சோகையைப் போக்கிடவும் உதவுகிறது.

இத்திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14,500 டன்னும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் 500 டன்னும் 1.10.2020 முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மூன்றாண்டு காலங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

error: Content is protected !!