சட்டமன்றத் தேர்தல் பிரசார பரப்புரை- முதல்வர் பழனிசாமி நாளை தொடங்குகிறார்!

சட்டமன்றத் தேர்தல் பிரசார பரப்புரை- முதல்வர் பழனிசாமி நாளை தொடங்குகிறார்!

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. ஆனால், அதிமுக அதிகாரப்பூர்வமாக பிரச்சாரத்தை தொடங்காவிட்டாலும், மாவட்ட வாரியாக, அரசு நிகழ்ச்சிகள் மூலம் அரசின் சாதனைகளை சொல்லி, மறைமுகமாக பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந் நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். இது குறித்து சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது முதலமைச்சர் பழனிசாமி, “நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் சட்டமன்ற தேர்தல் பரப்புரையை எடப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள செண்ட்ராயப் பெருமாள் கோயிலில் இருந்து, தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்க உள்ளேன்” என்று கூறினார்.

ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி நாளை காலை கரிய பெருமாள் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இதைத் தொடர்ந்து, அங்கு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர், சீரங்கனூர், இருப்பாளி, வேலநாயக்கன்பாளையம், ஆலச்சிபாளையம், எட்டி குட்டைமேடு ஆகிய இடங்களில் மினி கிளினிக்கை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் செல்லும் அவர் அங்கு ஒரு மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தையொட்டி, முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!