நான் ஃபாரீன் கிளம்பியிருப்பது ஸ்டாலின் ட்ரிப் மாதிரி சொந்த நலனுக்கல்ல – பழனிச்சாமி பேட்டி =வீடியோ!

தமிழகத்தை தொழில்துறையில் முன்னேற்ற, மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக வெளிநாடுகளில் இருந்து அதிக முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடு களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி வரை 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்த நாடுகளின் தொழில திபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். முன்னதாக விமானநிலையத்தில் முதலமைச்சர் அளித்த பேட்டியில், வெளிநாடு களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்க உள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் போல் சொந்த நலனுக்காக தான் வெளிநாடு போகவில்லை என்றும் தெரிவித்தார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமி. வெளிநாடு பயணம் மேற்கொள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட வரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் முதல்வருக்கு பூங்கொத்து உற்சாக வரவேற்பை அளித்தனர். மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தொழில் அதிபர்கள் அழைப்பின் பேரில் முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்காள்வதாக தெரிவித்தார். தன்னுடைய வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் கொச்சைப் படுத்தி பேசுவதாக சாடிய முதலமைச்சர், தான் ஒன்றும் தொழில் அதிபர் அல்ல என்றும் சாதாரண விவசாயி என்றும் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே வெளிநாடு சுற்றுப்பயணம் என்றும் விளக்கம் அளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடியார் செய்தியாளர்களுக்கு பேட்டி விவரம் இதோ:.

கேள்வி: இந்தப் பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது?

பதில்: இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய், ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் துவங்குவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். ஏற்கனவே 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். அப்பொழுது பல தொழிலதிபர்கள், நீங்கள் வெளிநாட்டிற்கு வந்து தொழிலதிபர்களை சந்தித்து, தமிழகத்திலே தொழில் துவங்க முன்வாருங்கள் என்று அழைப்பு விடுத்தால், அதிக அளவில் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டாளர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அந்த வகையில் நீங்கள் வாருங்கள் என்று அழைத்தார்கள், அந்த அழைப்பின் பேரில் இப்பொழுது வெளிநாடு செல்கின்றேன். பல்வேறு தொழிலதிபர்களை அழைத்து, தமிழகத்திலே புதிய தொழில் துவங்குவதற்கு உண்டான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதற்காக செல்கிறோம். தொழிலதிபர்களை சந்தித்து, அதிக அளவில் முதலீட்டை ஈர்ப்பதற்குத் தான் இந்த சுற்றுப்பயணமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி : இதற்கு ஏதாவது இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

பதில்: நான் ஏற்கனவே அவர்களிடத்திலே குறிப்பிட்டிருக்கின்றேன். அங்கு சென்று அவர்களை யெல்லாம் சந்தித்து விட்டு, உங்களை சந்திக்கின்றபொழுது, நிச்சயமாக எவ்வளவு முதலீடு தமிழகத்திற்கு வரும் என்ற செய்தி பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்படும்.

கேள்வி: இந்தப் பயணத்தைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகிறதே?

பதில்: ஒவ்வொரு முறையும் விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். அவர் சொந்த விஷயத்திற்காக வெளிநாடு செல்வதாக சொல்கிறார், அப்படியென்றால், என்ன சொந்த விஷயம்? அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன? அவர் இதுவரைக்கும் பத்திரிகைக்கும், ஊடகத்திற்கும் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், நான் சுற்றுப் பயணம் மேற்கொள்வதை கொச்சைப்படுத்திப் பேசுகிறார். இவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வது, தமிழகத்திலே புதிய தொழில் துவங்குவதற்கு அல்ல, சொந்த விஷயத்திற்கு வெளிநாடு செல்கிறேன் என்று சொல்கிறார், அது தவறான கருத்து. நான் பெரிய தொழிலதிபர் இல்லை, சாதாரண விவசாயி. இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், புதிய, புதிய தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரவேண்டும், அதன் மூலமாக படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும், பொருளாதாரம் மேம்பாடு அடைய வேண்டும், அதுதான் எங்களுடைய நோக்கம், அதுதான் எங்களுடைய லட்சியம் அதற்காகத் தான் நாங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை அமைத்து இன்று புறப்பட்டிருக்கின்றோம்.

கேள்வி: ஏற்கனவே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன?

பதில்: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் எந்த ஆட்சியினாலும் உடனடியாக தொழிற் சாலைகளை அமைத்துவிட முடியாது, சில நடைமுறைகள் உள்ளன. அதனை நிறைவேற்றத் தேவையானவற்றை நடைமுறைப்படுத்தியவுடன் தான் தொழில் துவங்க முடியும். 2019–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவைகளெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும். நாம் தொழில் முதலீட்டாளர்களை அழைத்தால் தான் அவர்கள் இங்கு வந்து தொழில் துவங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அதன் அடிப்படையில் நான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறேன்.

கேள்வி: இந்தப் பயணம் எந்தளவிற்கு தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமாக இருக்கும்?

பதில்: தமிழகம் அனைத்து அம்சங்களுடன் கூடிய ஒரு மாநிலம். தடையில்லா மின்சாரம் வழங்கிக் கொண்டிருக்கின்றோம், சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பேணிக் காக்கப்படுகிறது, படித்த இளைஞர்கள் அதிகம் இருக்கின்றார்கள், 1074 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரைச் சாலையும் இருக்கின்றது, பல துறைமுகங்கள் இருக்கின்றன, விமான நிலையங்கள் இருக்கின்றன. தொழில் துவங்குவதற்கான அனைத்து வசதிகளும் உள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு. எனவே, தமிழ்நாட்டில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றார்கள். அந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி அதிகளவில் தமிழகத்திற்கு தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் துவங்க வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.”இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.