April 17, 2021

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாயார் காலமானார்!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக் குறைவால் இன்று சேலத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உடல்நலக் குறைவு காரணமாக, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் தவுசாயம்மாள் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் (12-10-2020) உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து உடனடியாக சேலம் புறப்பட்டு சென்றார். அதிகாலையில் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்கு சென்ற அவர், தனது தாயரின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி. அன்பழகன், ராஜேந்திர பாலாஜி, சரோஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலிருந்து, அவரது தாயாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மயானத்தில் இன்று காலை 9.30 மணியளவில் எரியூட்டப்பட்டது. முதலமைச்சரின் அண்ணன் கே.கோவிந்தராஜன், தாயாரின் உடலை எரியூட்டினார்.

துணை முதலமைச்சர் இரங்கல்

முதல்வர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி. தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால்வாடும் முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் இரங்கல்

முதல்வரின் அன்புத் தாயார் திருமதி. தவுசாயம்மாள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன், தாயாரது பிரிவால் வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் இரங்கல்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தையில்லை” என இரங்கல் செய்தியில் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.