October 16, 2021

ஹோட்டல்களில் உணவு பார்சல் வாங்கப் போறீங்களா? அப்ப பாத்திரம் கொண்டு போங்க!

முன்னெல்லாம் தொலைதூரப் பயணங்களின் போது ஹோட்டல் உணவு அத்தியாவசியமாகி இருந்த நிலையில் தற்போது எல்லா நேரங்களிலும் ஆர்டர் செய்து உணவு வாங்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. அதையொட்டி சட்னி, சாம்பார் தொடங்கி சாதத்தைக்கூட பிளாஸ்டிக் டப்பா, பாலித்தீன் கவர்களில் பார்சல் செய்துதான் தருகிறார்கள். அதிலும் கையேந்தி பவன், ஸ்டார் ஹோட்டல் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கையே, நாகரிக வாழை இலையாக பயன் படுத்துகின்றனர். சில இடங்களில் சாப்பிடுவதற்கும் தட்டின் மேல் பிளாஸ்டிக் இலை அல்லது பிளாஸ்டிக் காகிதம்தான் விரிக்க்கும் நிலையில் அரசே கொஞ்சம் கொஞ்சமாக கெடுபிடி செய்து பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை போட்டு வரும் நிலையில் தற்போது ஹோட்டல்களில் உணவை பார்சல் செய்து வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் அதற்கான பாத்திரங்கள் மற்றும் பைகளை உடன் கொண்டு வந்தால் அவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஆம்.. வரும் 2019ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை சிறிது சிறிதாக குறைக்க நடவடிக்கைகள் பல்வேறு துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஹோட்டல் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதன்படி ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உணவு பொட்டலம் ஆர்டர் செய்வோரிடம் அதற்கான பாத்திரங்கள் மற்றும் பைகளை உடன் எடுத்துவரும்படி வலியுறுத்த தமிழக ஹோட்டல் சங்கம் முடிவெடுத்துள்ளது.மக்கள் சொந்தமாக பாத்திரங்கள் எடுத்து வந்து உணவு வாங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில் அத்தகைய வாடிக்கையாளர்களின் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தமிழக ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பத்தாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். ஸ்ரீநிவாசன் ‘‘தமிழகத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன.

வேலூர், சிதம்பரம் மற்றும் மதுரையில் உள்ள பல ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் உணவு வாங்கி செல்ல பாத்திரம் கொண்டு வர வேண்டும் என முன்பே அறிவித்துவிட்டனர்.இந்த நடவடிக்கை மீண்டும் நம்மை பழைய கால நடைமுறைக்கு கொண்டு செல்லும். ‘‘40 வருடங்களுக்கு முன் அனைத்து வீடுகளிலும் உணவை கொண்டு செல்ல அலுமினியம் அல்லது தாமிரத்தில் உணவு காரியர் இருக்கும். ஆனால் பிளாஸ்டிக் பயன்பாடு வந்தபின் அந்த வழக்கம் குறைந்துவிட்டது’’ என ஆர்.ஸ்ரீநிவாசன் கூறினார்.

இந்த சலுகை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த ஹோட்டல்கள் வெளியே அறிவிப்பு பலகைகள் வைக்கும்படி சங்கத்தின் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்படி எல்லாம் எந்த முயற்சி எடுத்தாலும் ஹோட்டலுக்கு வரும் அனைவரும் தங்களுக்கான பாத்திரங்களை எடுத்து வர மாட்டார்கள். அதனால்தான் அடையார் ஆனந்த பவன் போன்ற சில ஹோட்டல்களில் பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக உணவை வாழை இலை, தையல் இலைகளில் பொட்டலம் கட்டி தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க்து.