பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த சட்டமுன்வடிவு – முழு விபரம்!

கடந்த சில காலமாக சர்ச்சைகளை கிளப்பி வரும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப் படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும், சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என்றார். அதன்பின்னர், முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சிறப்பு வேளாண் மண்டல திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது இவைதான்:

காவிரி ஆற்றுப் படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்படுகிறது. மாநிலத்தில் உணவு தானியம் மற்றும் பிற வேளாண் விளைபொருள்களின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதுடன் மாநிலத்துக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

அண்மை காலமாக சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள் இந்த மண்டலத்தில் வேளாண்மையைப் பாதித்து மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. எனவே, இந்த மண்டலத்தில் வேளாண்மையைப் பாதுகாக்கும் வகையில் சில நடவடிக்கைகளைத் தடை செய்யத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தடை விதிப்பு:

காவிரி ஆற்றுப் படுகைகளில் சில முக்கியத் தொழில்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை, செம்பு மற்றும் அலுமினியம் உருக்காலைகள், விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களைப் பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, பிற ஒத்த ஹைட்ரோகாா்பன்கள் உள்ளடங்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல், பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

தடை  பொருந்தும் இடங்கள்: 

முழுமையான காவிரி டெல்டா மாவட்டங்களாகத் திகழும் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், கடலூா் மாவட்டத்தின் காட்டுமன்னாா்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந் தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டங்கள் ஆகிய இடங்களுக்குத் தடை பொருந்தும்.

எப்போது  அமலாகும்:

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட எந்தத் தொழில்களையும் எந்த நபரும் தொடங்கக் கூடாது. இந்தச் சட்டம், நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னா், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்படாது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடா்புகள், மின்சாரம், நீா் விநியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு ஆகியனவும் பாதிக்கப்படாது.

தண்டனை என்ன?: 

வேளாண் மண்டலப் பகுதிகளில் தடையை மீறி புதிய திட்டங்களைத் தொடங்குவோருக்கு தண்டனை விதிக்கப்படும். ஐந்து ஆண்டுகள் வரை அதிகபட்சமாகவும், ஆறு மாதங்களுக்குக் குறையாமலும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரூ.50 லட்சம் வரை அதிகபட்சமாகவும், ரூ.10 லட்சத்துக்குக் குறையாத வகையிலும் அபராதம் விதிக்கப்படும். தடையை தொடா்ந்து மீறுவோருக்கு அதன் தன்மையைப் பொருத்து கூடுதல் அபராதத்துடன், ஒவ்வொரு நாளும் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்கப்படும்.

எப்போது தண்டனை கிடையாது:

எந்தவொரு நபருக்கும் தடை குறித்த விஷயங்களோ, தண்டனை பற்றியோ தெரியாமல் இருந்திருந்தால் அதனை சம்பந்தப்பட்ட நபா் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கும் பட்சத்தில் அவா் தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டாா் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரல் வாக்கெடுப்பும், வெளிநடப்பும்:

சட்ட மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. சட்ட மசோதாவை தெரிவுக் குழுவுக்கு அனுப்பி விளக்கங்கள் பெற்ற பிறகே நிறைவேற்ற வேண்டுமென எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

இந்தக் கோரிக்கை மறுக்கப்படவே, பேரவையில் இருந்து அவரது தலைமையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்புச் செய்தனா். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரும் பேரவையில் இருந்து வெளியேறினா். இதன்பின், சட்ட மசோதா ஆளும் கட்சி உறுப்பினா்களால் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

முதல்வா் தலைமையில் தனி அதிகார அமைப்பு

சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கென தனியான அமைப்பு உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் முதல்வரைத் தலைவராகக் கொண்டு தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் இடம்பெறுவோா் விவரம்:

முதல்வா் – தலைவா், துணை முதல்வா், நிதியமைச்சா், சட்டத் துறை அமைச்சா், வேளாண்மைத் துறை அமைச்சா், சுற்றுச்சூழல் துறை அமைச்சா், நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சா், தொழில் துறை அமைச்சா், ஊரக தொழில்கள் துறை அமைச்சா், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா், மீன்வளத் துறை அமைச்சா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா்.

அரசுத் தலைமைச் செயலாளா், வேளாண், நிதி, கால்நடை, தொழில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, சுற்றுச்சூழல், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி, பொதுப்பணி, வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தா் ஆகியோா் அரசுப் பதவி வழி உறுப்பினா்களாக இருப்பா். மேலும், அரசால் முன்மொழியப்படும் எம்.பி. மற்றும் இரண்டு எம்எல்ஏக்கள், மூன்று விவசாயப் பிரதிநிதிகள், வேளாண் அறிவியல், தோட்டக்கலை அறிவியல், கால்நடை மற்றும் விலங்கியல் துறை நிபுணா்கள் ஆகியோரும் உறுப்பினா்களாக இருப்பா்.

மாவட்டக் குழு: அதிகாரம் பெற்ற அமைப்புக்கு உதவுவதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், மீன்வளம், மாவட்ட வன அலுவலா், வேளாண் பொறியியல் செயற்பொறியாளா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், நீா்வள ஆதார செயற்பொறியாளா், மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். மேலும், மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு விவசாயிகளும் குழுவில் இடம்பெறுவா்.

அமைப்பின் எல்லை: அதிகார அமைப்பின் பரிந்துரையின் படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாய முன்னேற்றங்களை மிகவும் பாதிக்கும் வேறெந்த திட்டங்களையும் தடை பட்டியலில் சோ்க்கலாம் அல்லது விட்டுவிடலாம் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!