December 1, 2021

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை திப்பு ஜெயந்தி-யாக கொண்டாட பாஜக எதிர்ப்பு!

கர்நாடகத்தில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா திப்பு ஜெயந்தியாக அரசு சார்பில் கொண்டாடப் படும் என அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகி யாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். ‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து, கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கியபடியே மரணத்தைத் தழுவியவர். பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் குடிமக்கள் அனைவரையும் சமமாகப் பாவித்து ஆட்சி செய்த பண்பாளர்.இன்றளவும் கர்நாடக மக்கள் திப்புசுல்தானை தங்களது மண்ணின் நாயகனாக கருதி போற்றுகின்றனர்.

மேலும் இந்த திப்பு சுல்தான் ஆட்சியின் சிறப்புக்கள் என

• அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.

• கப்பல் கட்டும் தளம் அமைத்தார்.

• இந்து இஸ்லாமியர் சகோதரத்துவத்தைப் பேணினார்.

• இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.

• கிராமங்களும் நகரங்களுக்கு சமமான வளர்ச்சியை அடைந்தன.

• போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார் என்றெல்லாம் இது நாள் வரை தகவல்கள் பரவி வந்தன

இந்நிலையில் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்று குவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக குற்றம் சாட்டிய பாஜக சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும் பா.ஜ.கவின் கடும் எதிர்ப்புக்கு இடையே திப்பு ஜெயந்தி விழா இன்று காலை 11.30 மணி முதல் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் துணை முதல்வர் பரமேஷ்வரா தலைமையில் பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப் பட்டு வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர பெங்களூரு நகர் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 15,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில் குமார் தெரிவித்தார்.

இதனிடையே , திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மடிகேரி பகுதியில் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடிகேரியில் உள்ள ஸ்ரீ ஓம்காரேஷ்வரா ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த போராட்டக் குழுவினர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். திப்பு ஜெயந்திக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி சென்ற அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

அதே சமயம் திப்பு ஜெயந்தி விழாவை முதலமைச்சர் குமாரசாமி புறக்கணித்துள்ளார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதால், இந்த விழாவில் தன்னால் கலந்துகொள்ள முடியாது எனவும், வேறு எந்த காரணத்தையும் ஊகிக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.