January 22, 2022

நேர மேலாண்மையை எப்படி திறமையாக கையாள்வது?!

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவன நிருபர்கள் ஆவணப்படமொன்றுக்காக வீட்டுக்கு வந்து என்னிடம் பேட்டி எடுத்தார்கள். அதில் இன்றைய இளைஞர்கள் நேர மேலாண்மையை எப்படி திறமையாக கையாள்வது என்பதை பற்றியும் சில விஷயங்களை சொன்னேன்.

time oct 9

இன்றைய இளைஞர்களுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. உடல்நிலை, மனநிலை சார்ந்த பாதிப்புகள், விவாகரத்துகள். குடும்ப உறவில் சிக்கல்கள் எல்லாமே இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன. உறக்கத்துக்காக ஏழு எட்டு மணி நேரமும், அலுவலகத்துக்காக ஏழு எட்டு மணி நேரமும், நமது குடும்பத்துக்காக அலல்து சொந்த விஷயத்துக்காக ஏழு எட்டு மணி நேரமும் நாம் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். தலைகீழாக நின்றாலும் நமக்கு கிடைத்திருப்பது ஒருநாளைக்கு இருபத்திநான்கு மணிநேரம்தான். அதில்தான் எல்லா விஷயங்களையும் திறமையாக கையாளவேண்டும். இதை சீரியல் பிராசஸிங் முறையில் செய்யலாம். அல்லது பேரலல் பிராசஸிங் முறையில் செய்யலாம். நான் சிலவற்றை சீரியலாகவும் சிலவற்றை பேரலலாகவும் செய்வேன்.

உதாரணமாக ஜிம்மில் திரெட்மில் செல்லும்போது பேஸ்புக் பதிவுகளை பார்ப்பேன். அலுவலக நேரத்தில் கிளையன்ட் அழைப்புகளில் கலந்துக்கொள்ளும்போது அழைப்பை மியூட்டில் வைத்துவிட்டு எனது ஆன்லைன் வங்கி, அலைபேசி கட்டணம், மின்சார பில் கட்டுவதை செய்து முடித்துவிடுவேன். அலுவலக பேருந்தில் பயணம் செய்யும்போது உறங்குவேன். அல்லது புத்தகம் படிப்பேன். பேஸ்புக் பார்க்க மாட்டேன்.வார இறுதிநாட்களை வீட்டில் இருப்பவர் களுக்காகவும், எழுத்துக்காகவும் பயன்படுத்துகிறேன். கி.ராவின் ஒரு கதை. “வேலை…வேலையே வாழ்க்கை” கரிசல் காட்டில் வாழும் சம்சாரிகள் எப்படி வீட்டையும் பார்த்துக்கொண்டு காட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு ஒரு நாளை ஓட்டுகிறார்கள் என்பதை பற்றிய கதை.

இன்று பலர் எப்போதும் பேஸ்புக்கிலேயே இருப்பதை பார்க்கிறேன். பேஸ்புக்கை திறமையாக கையாள்வதும் நேர மேலாண்மையில்தான் வரும். நான் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எனது அலைபேசியிலிருந்து பேஸ்புக் பதிவுகளை எழுதுவதில்லை. படிக்க மட்டும் அலைபேசியை பயன்படுத்துவேன். எனது டைம்லைன் தாண்டி நான் வேறெந்த பதிவுகளையும் படிக்க மாட்டேன். அதுபோல இன்பாக்ஸ் செய்திகளை வாரம் ஒருமுறை மேலோட்டமாக படிப்பேன். ஆனால் இதில்தான் ஒரு சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. எனது இன்பாக்ஸில் ஒருவாரத்துக்கு நூற்றுக்கணக்கான செய்திகள் வருகின்றன. சிலர் திருமண பத்திரிக்கைகளை ஸ்கேன் செய்து இன்பாக்ஸ் அனுப்பி வைத்து திருமணத்துக்கு வந்திடுங்க என்று அழைக்கிறார்கள். இது என்ன மாதிரியான நாகரீகம்? சிலர் வெறுமனே ஹலோ ஹலோ என்று தினமும் ஒரே செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் நீங்க யார்? ஏன் பேஸ்புக்கில் எழுதறீங்க என்று கேட்டு தலையை கிறுகிறுக்க வைக்கிறார்கள். சிலர் நம்மை யாராவது திட்டி எழுதியிருந்தால் அந்த பதிவின் லிங்கை இன்பாக்ஸில் தருகிறார்கள். எனது ஹாட்மெயில் மின்னஞ்சலை திறந்தால் வயாகரா மாத்திரை முதல் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யுங்க என்பது வரை நூற்றுக்கணக்கான ஸ்பாம் மெயில்கள் வருகின்றன. இதை எல்லாவற்றையும் ஒரு மனிதன் பொறுமையாக படித்துக் கொண்டிருக்க முடியுமா? பேஸ்புக் இன்பாக்ஸ் செய்திகளும் அதுபோலத்தான். ஒருவரிடம் ஏதாவது முக்கியமான தகவல்கள் சொல்ல வேண்டுமென்றால் அவரது அலைபேசியை தொடர்பு கொண்டு பேசுவது நல்லது. அல்லது அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம்.

பேஸ்புக் என்பது எப்போதாவது சிறு ரிலாக்ஸ் செய்ய வந்துபோகும் இடம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தால் கீழே இறங்கி வந்து ஒரு தம் அடித்துவிட்டுபோவது போல. அதையே இருபத்திநான்கு மணிநேரமும் செய்யமுடியுமா? அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பேஸ்புக் நண்பர்களை சந்திப்பதுண்டு. இந்த பதிவு சற்று நீளமாக எழுத வேண்டிய தேவை இருந்தது. எனக்கு இன்பாக்ஸ் செய்திகளை அனுப்பினால் உங்கள் நேரம்தான் வேஸ்ட். சில நேரம் மற்றவர்களின் சவுகரியத்தை அல்லது மற்றவர்களுக்கு மனது வலிக்கும் என்றெல்லாம் பார்த்தால் நாம் உருப்படாமல் போய்விடுவோம். சிலவற்றை கடுமையாக சொல்ல வேண்டியுள்ளது. நேரத்தை திறமையாக பயன்படுத்துவது ஒரு கலை.

விநாயக முருகன்