அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’!

அயோத்தி ராமர் கோயிலில் 2,000 அடி ஆழத்தில் புதைக்கப்படும் ‘டைம் கேப்சூல்’!

ராமர் கோயில் வரலாறு, ராமஜென்மபூமியின் வரலாற்று உண்மைகள் ஆகியவற்றை எதிர் காலச் சந்ததியினரும் தெரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் மீண்டும் பிரச்சினை ஏதும் வராமல் இருக்கவும் கோயில் கட்டுமானத்தின்போது 2 ஆயிரம் அடி ஆழத்தில் ராமர் கோவில் குறித்த ‘டைம் கேப்சூல்’ வைக்கப்படும் என்று ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் தெரிவித்துள்ளார்.

டைம் கேப்சூல் என்பது, தற்போதுள்ள நிகழ்வுகள், அதுகுறித்த உண்மைத் தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்கள் ஆகியவை எதிர்காலச் சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தி அதைக் குடுவைக்குள் அடைத்து, பூமிக்குள் புதைத்து வைப்பதாகும்.ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ”அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் நீண்ட சட்டப் போராட்டம் நடந்துள்ளது. இந்தச் சட்டப்போராட்டம் இப்போதுள்ள தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் பாடமாகும்.ஆதலால், ராமர் கோயில் கட்டும்போது கட்டுமானத் தளத்தின் 2 ஆயிரம் அடி ஆழத்தில் கோயிலின் வரலாறு, ராமஜென்மபூமியின் உண்மைகள், புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய டைம் கேப்சூல் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இதனால் வரலாற்றினை எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் தாமிரப் பத்திரத்தில் உண்மை வரலாறு பொறிக்கப்பட்டு கோயிலின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!