டிக் டாக் தடை நிரந்தரமல்ல: – அந்நிறுவனம் நம்பிக்கை!

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான BYTE Dance, இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏழாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலை தருவதாக இருந்தாலும் விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது ஐகோர்ட் மதுரை கிளை அளித்த  தடையை தொடர்ந்து டிக்டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. இந்த டிக்டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் அதிகளவு பரவுவதால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆக டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உலகம் முழுக்க சுமார் 150 சந்தைகளில் சுமார் 75 மொழிகளில் டிக்டாக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலிக்கான தடை எந்த வகையிலும் பலன் தராது என்ற வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  டிக்டாக் மீதான தடை இடைக்கால நடவடிக்கை என நினைக்கிறேன்.  அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம் என டிக்டாக் இந்தியாவின் மூத்த அதிகாரி சுமேதாஸ் ராஜ்கோபால் தெரிவித்தார். டிக்டாக் சமூகம் தொடர்ந்து இயங்கி வருகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த செயலியில் பரவும் தரவுகளை ஆய்வு செய்யும் குழுவினரின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ராஜ்கோபால் தெரிவித்தார். கடந்த வாரம் மட்டும் விதிகளை மீறியதாக சுமார் 60 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு பிரபலங்கள் டிக்டாக் பயன்படுத்துவோரின் திறமையை பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார். டிக்டாக் செயலி அனைவருக்கும் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் எனவும்  மேலும் ஆயிரம் இந்திய ஊழியர்களை பணியில் நியமிக்கவும் முடிவெடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.