தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்திற்கு ஆப்பு வைக்க முடியாது!

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

இன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவெழுச்சி நாள்.

மானிட குலமே வெட்கித் தலைகுனியும் வகையில் இருபத்தோராம் நூற்றாண்டின் முதற் தசாப்தத்தில் முழு உலகமும் கண்மூடி, மௌனியாகப் பாராமுகம் காட்டத் தமிழீழ தேசத்தின் ஒன்றரை இலட்சம் மக்களை நரபலியெடுத்துச் சிங்களம் அரங்கேற்றிய இனவழிப்பின் இறுதி நாள் இன்று. 1619ஆம் ஆண்டில் நிகழ்ந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் 390 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்நியர்களிடம் தமது இறையாட்சியை தமிழீழ தேசம் பறிகொடுத்த நாளும் இன்று தான்.

தமிழீழ தாயக மண்ணும், அதன் குடிமக்களின் இறையாட்சியை மீளவும் நிலைநிறுத்திய தமிழீழ நடைமுறை அரசும் எதிரியின் ஆக்கிரமிப்புப் பிடியில் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தமது உயிரையே வேலியாக்கி இறுதிவரை களமாடி வீழ்ந்த மான மாவீரர்களையும், தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற மறுத்த ஒரேயொரு காரணத்திற்காக எதிரியால் இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களையும் எமது ஆழ்மனக் கோவில்களில் நிலைநிறுத்தி, அவர்களுக்காக எமது அகங்களிலும், இதயங்களிலும் சுடரேற்றி நாம் நினைவுகூரும் இன்றைய நாளில், எமது தேச விடுதலையை வென்றெடுத்து எமது எதிர்காலத் தலைமுறைக்குச் சுபீட்சமாக எதிர்காலத்தை வழங்குவதற்கு உறுதிபூண வேண்டியவர்களாகவும் உள்ளோம்.

எமது அன்பார்ந்த மக்களே,

முழு உலகையும் தன்பக்கம் வளைத்து, வல்லரசுகளின் படைக்கல உதவியுடன் போர்க் களத்தில் வெற்றிகண்டமை போன்று, தமிழீழ தேசத்திற்கு எதிராகக் கருத்தியல் போர் ஒன்றைத் தொடுத்து, அதன் மூலம் தமிழீழ தேசத்தின் சுதந்திரப் பிரக்ஞையை இல்லா தொழித்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்திற்கு ஆப்பு வைக்கலா மென்று முள்ளிவாய்க்கால் யுத்தவெற்றிக்குப் பின்னர் சிங்களம் கண்ட கனவை தகர்த்தெறிந்த பெருமை ஊடகமையத்திற்கு உண்டு.

கடந்த பதினொரு ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட எதிர்ப்புரட்சி முறியடிப்பு நடவடிக்கை களில், எமது குடையின் கீழ் பயணிக்காது விட்டாலும், எமக்கு உறுதுணையாக நின்று, சிங்களத்திற்கு எதிரான கருத்தியல் களத்தில் சமராடிய அனைத்து ஊடகங்களையும், அமைப்புக்களையும் நாம் வாஞ்சையுடன் நினைவில் நிறுத்துகின்றோம்.

அதேநேரத்தில் மாறிவரும் உலக அரசியல் சூழல்களுக்கு ஏற்ப தமிழீழ தேச சுதந்திரப் போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்குத் தேவையான பொருளாதார மற்றும் ஆளணிப் பலத்தைக் கொண்டிருந்த பொழுதும், கடந்த பதினொரு ஆண்டுகளாக அது விடயத்தில் எவ்விதமான காத்திரமான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், வெறுமனவே காகித அறிக்கைகளை வெளியிடுவதிலும், புதிது புதிதாக மந்திரத்தால் மாங்காயை வீழ்த்தும் மாயாவாதத் திட்டங்களை அறிமுகம் செய்து எமது மக்களின் மத்தியில் சோர்வையும், தளர்வையும் சில அமைப்புக்களும், ஊடகங்களும் ஏற்படுத்தியதானது எமக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது. இனியும் இவ்வாறான செய்கைகளில் இவ்வாறான அமைப்புக் களும், ஊடகங்களும் ஈடுபடுவது இவர்களின் நதிமூலங்கள் பற்றிக் கடந்த பதினொரு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நிலவி வந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் என்பதில் ஐயமில்லை.

உலகையே உலுப்பியெடுக்கும் கொரோனா கொல்லியிரியின் தாக்கத்தில் இருந்து மீள முடியாது மனித குலம் நிலைதடுமாறும் இன்றைய சூழமைவைத் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிங்களம், தமிழீழ மண் மீதான படையாட்சியையும், தமிழினக் கட்டமைப்பை அழிக்கும் நடவடிக்கைகளையும் சத்தம் சந்தடியின்றி முடுக்கி விட்டுள்ளது. இதனை வெறுமனவே கருத்தியல் களத்தில் களமாடும் தேசிய ஊடகங்களாகிய நாங்கள் மட்டும் முறியடிக்க முடியாது.

இதற்கு எதிரான எமது போர் தமிழீழ தாயகத்திலும், தாய்த் தமிழகத்திலும், உலக நாடுகள் தோறும் உள்ள அரசியல் – இராசரீகக் களங்களிலும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். இம் மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு தமிழீழ தாயகத்திலும், தாய்த் தமிழகத்திலும், புகலிட தேசங்களிலும் அரசியல் – இராசரீகக் முனைகளில் களமிறங்குவதற்கு வருமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம்.

தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துத் தம்மையே ஆகுதி யாக்கி வீழ்ந்த மான மாவீரர்களையும், மானச்சாவெய்திய எமது மக்களையும் நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாளாகிய இன்றைய புனித நாளில், எமது இலட்சியப் பயணத்தை வீச்சாக்குவோமென்று அனைவரும் உறுதிபூணுவோமாக.

 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

ஊடக மையம்
(பிரான்ஸ்)

Related Posts

error: Content is protected !!