துணிவு – விமர்சனம்!

துணிவு – விமர்சனம்!

டிகர் அஜித் தன் பெயருக்கு முன்னால் போடப்பட்டுக் கொண்டிருந்த அல்டிமேட் ஸ்டார், தல போன்ற பட்டங்களை துறப்பதற்கு முன்னாடியே தான் நடிக்கும் படங்களில் தன் வயதுக்கேற்ற கதையுடன் வருவோம்..வயதுக்கு மீறிய லவ்., கிவ் எல்லாம் யோசிப்பதை மறந்து விடுவோம் என்று சொன்னதாக ஒரு தகவல் வந்தது.. அதை மெய்யாக்குவது போலவே நம் தமிழ் சினிமா ஹீரோக்கள் தயங்க நினைக்கும் கேரக்டர்களில், துணிச்சலாக நடித்து வெற்றி பெற்று வந்தார். அப்படியான சிறப்புக் கதைக் கொண்ட விவேகம் படத்தில் அஜித் குமாராகவும் , விஸ்வாசம் படத்தில் தூக்கு துரையாகவும், நேர்கொண்ட பார்வை-யில் பரத் சுப்பிரமணியம் ஆகவும் வலிமை படத்தில் ஏசிபி அருண் குமாராகவும் வந்தவர் தற்போது துணிவு படத்தில் மைக்கேல் ஜாக்சன் என்ற பட்ட பெயருடன் கொஞ்சம் நெகட்டிவ் கலந்த கேரக்டரில் வந்து வங்கிகள் நம்மை எப்படி எல்லாம் சீட் செய்கிறது ., மியுச்சுவல் பண்ட், மினிமம் பேலன்ஸ், கிரெடிட் கார்டு என பல விஷயங்களுக்காக வங்கிகளில் கொடுக்கப்படும் எந்த ஒரு பாரத்தையும் முழுமையாகப் படிக்காமல் கையெழுத்துப் போடாதீர்கள் என்ற மெசேஜையும் சரியான தொணியுடன் உரத்தக் குரலில் வெளிக்காட்டி அசத்தி இருக்கிறார்.

அதாவது போலீஸ் ஆபீசர் ஒருவர் துணையுடன் சிட்டியில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் சில பல நூறு கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வங்கிக்குள் நுழைகிறது ஒரு கும்பல். அங்கே கஸ்டமர்களில் ஒருவராக இருந்த -அஜித் கொள்ளை அடிக்கும் திட்டத்தை முறியடிக்கிறார். அடடே.. இந்த அஜித் காப்பாற்ற வந்தவர் என நினைக்கும் போது அஜித்-தும் கொள்ளையடிக்க வந்தவர் என்று தெரிகிறது. இதை தாண்டி மூன்றாவதாக ஒரு டீம் கொள்ளையடிக்க திட்டம் போட்டு வங்கிக்குள் புகுந்து இருப்பதும் தெரிய வருகிறது. இந்த டீமை அனுப்பியதே வங்கியின் சேர்மன் தான் என்று அஜித் கண்டு பிடிக்கிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது, உண்மையில் அஜித் யார் என்பதை வினோத் ஹாலிவுட் பாதிப்புடன் சொல்ல முயன்றிருப்பதே துணிவு கதை,

அஜித் தன் வழக்கமான மேனரிசங்கள் சகலத்தையும் மூட்டைக் கட்டி வைத்து விட்டு ஒரு ப்ரண்ட்லியான நம்ம சென்னை தோனி பாணியில் அதிரடி அதகள ஹீரோ ஆக்ஷனை திரையில் காண்கையில் படு ரிலாக்ஸாக உள்ளது. போன “வலிமை” படத்தில் தனது உடல் தோற்றத்திற்காக பெரிதும் விமர்சிக்கப்பட்ட அஜித், அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்படத்தின் அவரது தோற்றமும், கெட்டப்பும் மிரள வைக்கிறது. வாலி, மங்காத்தா படங்களுக்குப் பிறகு வில்லத்தனம் கலந்த நடிப்பில் அஜித் மிரட்டி இருக்கிறார். நாயகி மஞ்சு வாரியர் படம் நெடுக வருகிறார். அவருக்கான மாஸ் காட்சிகளும் அப்ளாஸ் ரகம். குறிப்பாக வழக்கமான ரொமான்ஸ் ஹீரோயினாக இல்லாமல் ஸ்டண்ட் காட்சிகள் மூலமாக கவனம் பெறுகிறார்.

போலீஸ் ஆபீசர் ரோலில் வரும் சமுத்திரக்கனி தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரின் வேல்யூ-வை புரிந்து சிறப்பாகவும் செய்துள்ளார். வில்லனாக வரும் ஜான் கொக்கின் ரோல் கொஞ்சம் டம்மி ஆக்கப்பட்ட நிலையிலும் அவருடைய வில்லத்தனம் எட்டிப் பார்க்கிறது. தர்ஷனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிப்பதற்கு ஒரு நல்ல படமாக இது அமைந்திருக்கிறது மகாநதி சங்கர், பாவனி,பிரேம்,வீரா ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை தங்கள் நடிபின்மூலம் நியாயப்படுத்தி உள்ளனர். மைபா என்ற கேரக்டரில் வருபவர் நிஜ காமெடி வழங்குகிறார்.

ஜிப்ரான் இசையும், நீரவ் ஷா ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன. சுப்ரீம் சுந்தரின் சண்டை காட்சிகள் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரசிக்கும் படியாக உள்ளது.

டைரக்டர் ஹெச்.வினோத் இந்த துணிவு மூலம் ஜஸ்ட் ஒரு போன் காலில் லோன் வாங்கி இஎம்ஐ என்னும் புதைகுழியில்ல் சிக்கித் தவிக்கும் மக்கள், அவர்களை வைத்தே வருவாய் பார்க்க்க முயலும் வங்கிகள், இவர்களுக்களை வைத்து பிழைப்பு நடத்தும் மார்க்கெட்டிங் ஊழியர்கள், அவர்களின் டார்கெட் கோல்மால், பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும், சுற்றுலா சலுகை, ஊக்கத்தொகை போன்றவைகளுக்கு பின்னால் உள்ள வணிக அரசியல் என பணத்தை அச்சாணியாக கொண்டு சுழலும் இந்த அபாயப் போக்கை சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒட்டு மொத்த வங்கி அமைப்பையே தப்பு என சுட்டிக் காட்டி இருப்பது நெருடல்.. கூடவே ஓரிரு வெப் தொடரிலிருந்து லவட்டிய கதைக்கு இன்னும் கொஞ்சம் யோசித்து ஸ்கீரின் பிளே செய்திருந்தால் ஸ்கோர் செய்திருக்கலாம்..

எனி வே இந்த துணிவு- நல்லாவே இருக்குது

மார்க் 3.5/5

Related Posts

error: Content is protected !!