June 21, 2021

துக்ளக் ஆசிரியர் சோ காலமானார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ.ராமசாமி இன்று அதிகாலை 3.58 மணிக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 82. மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோ-விற்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

cho dec 6

எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் சோ உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் சோ உடல் தகனம் செய்யப்படுகிறது. சோ-விற்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சென்னையில் பிறந்த இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார்.

1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 – ம் ஆண்டு திருமணம் நடந்தது. ’சோ’எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர். 1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். பல்வேறு நாடகங்கள் எழுதி, இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார். இவரது ‘ஜட்ஜ்மென்ட் ரிசர்வ்டு’ ‘முகமது பின் துக்ளக்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட நாடகங்கள் நாடு முழுவதும் 1,500 தடவைக்குமேல் மேடையேறின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற நாடக நிறுவனத்தை 1954-ல் தொடங்கி சொந்தமாக நடத்தி வந்தார். பின்னர் திரைப்படத்துறையில் ஈடுபட்டு சிறந்த நகைச்சுவை நடிகராகவிளங்கினார். திரைப்படத்தில் இவர் நகைச்சுவையாக அரசியலை கிண்டலடிக்கும் காட்சிகள் பிரபலமாக ரசிக்கப்பட்டது.

தங்கப் பதக்கம் படத்தில் இவரது கவுன்சிலராக வரும் அரசியல்வாதி வேடம் அன்றைய ரசியலை தோலுரித்து காட்டியது. திராவிட அரசியலை முக்கியமாக விமர்சித்தவர். அதே சமயம்ம் திராவிட கட்சி தலைவர்களான அண்ணா , கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் போன்றவர், அவருக்கு அரசியல் வழிகாட்டி என்று குறிப்பிடுவர்கள்.

1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர்‘பிக்விக்’ என்ற ஆங்கில இதழை 1976-ம் ஆண்டும் தொடங்கினார். அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். இவர் தனது பத்திரிகைத்துறைச் சேவைக்காக 1985 இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார். துக்ளக் என்ற இவரது திரைப்படம் பிரபலமானது. இவர் மாநிலங்களவை உறுப்பின‎ராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை செயல்பட்டார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து அரசியல் தலைவர்களுடன் நீண்டகால நட்புடன் இருந்தாலும், யாரைக் குறித்தும் விமர்சனம் செய்ய இவர் தயங்கியதே இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள், இல்லாதவர்கள், நண்பர்கள், நட்புறவு இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் துணிச்சலுடன் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுவார். தமிழக அரசியல், இந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலக அரசியல் ஞானமும் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றியவர், சோ ராமசாமி