திருச்சூர் பூரம் திருவிழா! – கோயில் குடைகளில் சாவர்க்கார் படத்தால் சர்ச்சை!

திருச்சூர் பூரம் திருவிழா! – கோயில் குடைகளில் சாவர்க்கார் படத்தால் சர்ச்சை!

கேரளாவில் திருச்சூர் பூரம் என்பது மே மாதத்தில் பூரம் தினத்தன்று நகரத்தின் மையத்திலுள்ள வடக்குநாதன் கோவில் முன் கொண்டாடப்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து துவங்கி திருவம்பாடி பகவதி அம்மன் கோவிலில் முடிகிறது.சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட யானைகள், மாயாஜால வித்தைகளான ஐந்து மேளங்கள் , தொடர்ந்து ஒலிக்கும் பஞ்சவாத்தியம் மற்றும் நிகழ்ச்சியின் முடிவில் 6 – மணி நேரத்திற்கு மேலாக வெடிக்கும் வான வேடிக்கை என கேரளாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான திருவிழா இதுவேயாகும். திருச்சூர் பூரம் பூரங்களின் பூரம் என்று அழைக்கப்படுகிறது. வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் 20-லட்சத்திற்கும் மேலானோர் இந்த பூர நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். கொரோனா கட்டுபாடுகளால் கடந்த இரு ஆண்டுகளாக களையிழந்த இந்த திருவிழா இன்று பிரமாண்டமாக நடந்து வருகிறது.. இதனால் திருச்சூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பூரம் திருவிழாவிற்காக இந்த ஆலயத்தைச் சுற்றியுள்ள 8 கோயில்களில் இருந்து 80 யானைகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டுள்ளது.

இந்த பூரம் திருவிழாவின் மைய நிகழ்வான குடை மாற்றம் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்கென 1200 வண்ணக்குடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் குடையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சாவர்க்கர் புகைப்படம் இருப்பதாக சர்ச்சை கிளப்பியுள்ளது. கேரளத்தில் இடதுசாரி ஆட்சி நடக்கிறது. இந்த ஆலயமும் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இருந்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் சாவர்க்கர் புகைப்படத்தைப் போட்டு குடை அடித்தது எப்படி என்னும் சர்ச்சை எழுந்துள்ளது.

பாரமைக்காவு தேவசம்போர்டு தான் இந்தக் குடையை வடிவமைத்திருக்கிறது. இந்த குடையில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் புகைப்படங்களோடு சாவர்க்கரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இது சமூகவலைதளங்களில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது. மாணவர் காங்கிரஸும் இதைக் கேள்விப்பட்டு போராட்டத்தில் குதித்தது.

இதனிடையே இது குறித்து விளக்கம் அளித்திருக்கும், தேவசம்போர்டு தலைவர் ராஜேஷ்மேனன், “பூரம் திருவிழா குடையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் இடம்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு, சாவர்க்கர் பெயரை சுதந்திரப் போராட்ட வீரர் என்றே அறிவித்துள்ளது. இருந்தும், இந்தக் குடை மாற்றம் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தும் குடை அல்ல. கடவுளை விட உயர்ந்தவர் யாரும் இல்லை அல்லவா? அதில் மனிதர்களின் படத்தை கடவுளுக்கும் மேல் உயர்த்திப் பிடிப்பது இயலாத ஒன்று. நாங்கள் திறந்த மனதுடன் இந்தக் குடையை பொதுவெளியில் காட்சிப்படுத்தினோம். விஷமிகள் அதை சர்ச்சையாக்கி விட்டனர். இது குடை மாற்ற நிகழ்வில் பயன்படுத்தும் குடைகள் அல்ல” என்றார்.

error: Content is protected !!