January 26, 2022

நெல்லை : சாஃப்டர் பள்ளியில் உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்!

திருநெல்வேலி மாநகரில் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இன்று 3 மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 இலட்சம், காயமுற்ற 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 10.50 மணியளவில், இப்பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் எம். இசக்கி பிரகாஷ், எஸ். சஞ்சய், ஷேக்கு அபுபக்கர் கித்தானி மற்றும் அப்துல்லா உள்ளிட்ட 4 மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.