மலேசிய பிரதமர் பதவி விலகக்கோரி கோலாலம்பூரில் மாபெரும் பேரணி!

மலேசிய பிரதமர் பதவி விலகக்கோரி கோலாலம்பூரில் மாபெரும் பேரணி!

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகக்கோரி அந்நாட்டின் முதுபெரும் தலைவர் மஹதிர் முஹம்மது தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

mala nov 20

மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் அப்துல் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது(91) வலியுறுத்தி வருகிறார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துவரும் நஜிப் ரஜாக், பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். மேலும், இதுதொடர்பான விசாரணைக்கு தடையாக இருந்துவரும் அவர், அரசுதரப்பு வக்கீலை மாற்றியதுடன் தன்னைப்பற்றி விமர்சித்து வருபவர்கள் மீதும் நடவடிக்ககளை எடுத்து வருகிறார்.

பிரதமர் பதவியில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும் என கடந்த ஆண்டு கோலாலம்பூரில் பொதுமக்கள் துணையுடன் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டம் பெரிய அளவிலான பலனை தரவில்லை. இந்நிலையில், நஜிப் ரஜாக்கின் அரசியல் குருவாக கருதப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது(வயது 91) தலையில் நேற்று சுமார் 20 ஆயிரம் மக்கள் கோலாலம்பூர் நகரில் மாபெரும் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலாலம்பூர் நகரில் வானளாவிய இரட்டை கோபுரங்களை கொண்ட பெட்ரோனாஸ் டவர் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசிய மஹதிர் முஹம்மது, சட்டத்தை மதிக்காத நஜிப் ரஜாக் இனிமேலும் இந்த நாட்டின் பிரதமராக இருக்க தகுதி இல்லை. பொதுமக்களுக்கு சொந்தமான அரசுப் பணத்தை கையாடல் செய்த ‘திருடன்’ நஜிப் ரஜாக்கின் கொடூரமான ஆட்சியை கவிழ்ப்பதற்கான நேரம் நெருங்கி விட்டது என்று குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நஜிப் ரஜாக்கின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் நேற்றைய ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிஷ் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில முக்கிய தலைவர்களை போலீசார் ஏற்கனவே கைதுசெய்து தடுப்புக் காவலில் அடைத்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!