August 13, 2022

தொரட்டி : திரைப்பட விமர்சனம்!

நம் தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் மக்கள் செய்துவந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. இடையர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், பரதவர், வணிகர், வேடுவர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. இதில் முதலில் சொல்லி இருக்கும் இனமான இடையர் என்னும் ஆடு மேய்ப்போர் பற்றிய வாழ்க்கையை எழுத்தின் மூலம் கண் முன்னால் நிறுத்திய தமிழ் நாவல் கீதாரி. 2003ல் தமிழ் செல்வி எழுதி வெளியான அந் நாவலில் ஆடு… வெள்ளாடு… கிடா… மன்னாரம்… கூண்டு… பட்டி… ஆட்டுப் புலுக்கை… இவற்றை தவிர வேற எதுவும் தெரியாத அந்த மனிதர்கள், பேருந்தில் ஒருமுறை கூட பயணம் செய்திடாத மக்கள், லாந்தர் விளக்கை மட்டுமே உபயோகித்து கரண்ட் என்றால் என்ன என்றே தெரியாத ஜனங்கள்,திருமண நாளன்று மணமகன் ஆடு மேய்க்கச் சென்று விட்டால் அவன் ஆடு மேய்க்கும் கம்பை (தொரட்டி) அவனிடத்தில் வைத்து மணம் முடிக்கும் பழக்கமுடையோர். பெண்களுக்குச் சிறிய தந்தை உறவு முறையில் உள்ளவரும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் கொண்டோர். அண்ணன் இறந்தால் அண்ணன் மனைவியைத் தம்பி மறுமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை கடை பிடிப்போரான இடையர் நம்மை சுற்றி இருந்திருக்கிறார்களா வியக்க வைத்த அந்த கதையின் சாயலில் வெளி வந்திருப்பதுதான் ‘தொரட்டி’.

முழுக்கு புதுமுகங்களுடன் 80களில் ராமநாதபுரம் மாவட்ட சூழலை அப்படியே கண் முன் கொண்டு வந்திருக்கும் பி. மாரிமுத்து இயக்கத்தில் ரிலீஸாகி உள்ள படம் கோலிவுட் படைப்பாளிக்கு ஒரு பாடமாக வைக்க படம் என்பது சந்தேகமில்லை. ஆட்டு மந்தையை மேய்ந்த படி வாழும் இடையர் கள் கூட்டத்தைச் சேர்ந்த நாயகன் நாயகன் ஷமன் மித்ரு குடும்பத்தோடு வெளி ஊரில் உள்ள தூரத்து உறவினர் உதவியுடன் ஆட்டுக்கிடை போடுகிறார். அங்கு அவருக்கு மூன்று திருடர் களுடன் நட்பு கிடைக்கிறது. அவர்கள் ஷமனிடம் உள்ள பணத்தில் கும்மாளம் அடிக்கின்றனர். இந்த கூடா நட்பினால் குடி பழக்கத்திற்கு ஆளாகும் ஷமன் மித்ருவிற்கு திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவார் என எண்ணி தன் தூரத்து உறவினர் பெண்ணான நாயகி சத்யகலாவை ஷமனுக்கு திருமணம் செய்து வைக்கிறது.. ஆனாலும் திருந்தாமல் கூடா நட்பைத் தொடரும் நாயகனுக்கும், அவனை நம்பி வந்த நாயகி சத்யகலாவுக்கு நேரும் அவலங்கள்தான் கதை.

அறிமுக நாயகன் ஷமன் மித்ரு, இந்த வேடத்திற்கெனவே பிறந்தவர் மாதிரி இயல்பான அதே சமயம் வெகுளித்தனமான நடிப்பு மூலம் கவர்கிறார். அதைவிட இந்த தொரட்டியின் கூர் முனைக்கு இணையான நடிப்பை வழங்கி பிரமிக்க வைத்து விட்டார் ஹீரோயின் சத்யகலா. இவர் நிஜமாகவே ஆட்டு கிடாயில் பிறந்து வளர்ந்தவர் மாதிரி தன் ரோலை அநாயசயமாக செய்து அப்ளாஸ் வாங்கிறார்.

குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவும், ஜித்தின் கே ரோஷனின் பின்னனி இசை தொரட்டி-க்கு எக்ஸ்ட்ரா பலம் சேர்க்கிறது.

கொஞ்சம் பிசகினாலும் முழு நீள டாக்குமெண்டரியாகி விடும் கதையை ஜனரஞ்சகமான திரைக் கதையுடன் சகல தரப்புக்கும் பிடித்தது போல் சொல்லியிருக்கிறாஎ இயக்குநர் மாரிமுத்து, அதிலும் கிடை போடுவது என்றால் என்ன, அதனால் விவசாய நிலத்திற்கு என்ன பயன், என்பதை போகிற போக்கில் சாதாரணமாக சொல்லியிருந்தாலும், கிடை போட்டு வாழ்ந்து வந்த சமூகத்தினரின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை வசனங்கள் மூலமாகவே நம் மனதில் பதிய வைக்கிறார். ஆரம்ப பேராவில் சொன்னது போல் இந்த இடையர் மக்களின் பழக்க வழக்கத்தையும் பொதுவான மனித வாழ்க்க்கையின் நட்பு, காதல், துரோகம், குடும்ப உறவு என அனைத்தையும் அழகாகவும் கோரவையாகவும் கொண்டு போய் இருக்கிறார் இயக்குநரின் படைப்பு தமிழ் சினிமாவுக்கே ஒரு தொரட்டி

மார் 3.5 / 5