June 26, 2022

சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் காலமானார்!- அஞ்சலி ரிப்போர்ட்!!

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான் புற்று நோய் பாதித்து உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

கன்னியாகுமரி மாவாட்டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அவரது ஒரு கடலோர கிராமத்தின் கதையை வாசிக்காமல் யாரும் இலக்கிய பயணத்தை கடந்து செல்ல முடியாது. துறைமுகம், கூனன் தோப்பு, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம், சாய்வு நாற்காலி உள்ளிட்ட நாவல்களையும், பல சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

நெல்லை மாவட்டம் திருநெல்வேலி நகர் பேட்டையில் வசித்து வந்த இவர், இன்று மே 10 வெள்ளி, அதிகாலை 1:20 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தோப்பில் முகமது மீரான் உடல் இன்று மாலை 5:00 மணிக்கு நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன இவருடைய எழுத்துக்கள்.

சாம்பிளுக்கு:

வட்டார வழக்கு உபயோகப்படுத்தி எழுதிய மிக முக்கியமான எழுத்தாளர்களில் நானும் ஒருவராம். இது வாசகர்கள் மத்தியில் சிக்கலை உருவாக்காதா? என்று சிலர் கேட்கிறார்கள்

பெரிய சிக்கலை இது உருவாக்கும்னு எனக்கு தோணலே. வாசகன் என்பவன் சிறந்த கலைஞன். அவனுக்கு எந்த வட்டார வழக்குமே சிக்கலைக் கொடுக்கவே கொடுக்காது. வட்டார வழக்கு என்ற எழுத்து முறையை நான் கையாண்டதில்லே..எனக்குத் தெரிஞ்ச மொழி, எங்க மக்கள் பேசுற மொழியை எழுதனும்டு நான் எழுதினேன். எனக்கு தமிழ்ப் பின்னணி தெரியவே தெரியாது. நான் மலையாளப் பின்னணி. வட்டார வழக்குன்னா என்னான்டே எனக்குத் தெரியாது. எங்க ஊருல பேசுனபடியே நான் எழுதினேன். எழுதி , புத்தகமாயி , ரெண்டு மூணு ஆண்டுகளுக்குப் பிறகுதான் – வட்டார மொழிண்டு எல்லோரும் சொன்னபிறகுதான் – அப்படியொன்னு உண்டுன்னே எனக்குத் தெரியும். வட்டாரமொழிலெ எழுதனும்டு திட்டமிட்டு நான் எழுதினதே அல்ல. அந்த classificationஐ நான் விரும்பவுமில்லே.

அதே சமயம் புத்தக அறிவை விட – வாசிச்சி கிடைக்கிற அறிவை விட – அனுபவிச்சி கிடைக்கிற அறிவுதான் கலைக்கு பொருந்தும். ஒரு நல்ல படைப்பாளிக்கு அவனுடைய அனுபவங்கள்தான் முக்கியம். உலகத்தின் எந்த மிகச்சிறந்த படைப்பை எடுத்துக் கிட்டாலும் படைப்பாளி அவனுடைய அனுபவத்தைத்தான் எழுதியிருப்பான். நாஜி கேம்ப் அனுபவங்கள் பத்தியெல்லாம் jewsகள் நிறைய எழுதிருக்கான். எல்லாம் அவங்களோட அனுபவங்கள். அவங்க யாரும் புத்தகம் வாசிச்சவங்க அல்ல. அதேபோல ஆ·ப்ரிக்காவுல உள்ள வாழ்க்கையப் பத்தி நிறைய பேரு எழுதியிருக்கான். வாசிச்சதல்ல,அவங்களோட அனுபவங்கள். வெள்ளைக்கார சமூகத்திலேர்ந்து அவங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் , இம்சைகள் இதெல்லாம் தாங்க முடியாமதான் அவனுள்ளேர்ந்தே ஒரு எழுத்தாளன் உருவானான். அவன்தான் யதார்த்த படைப்பாளி. நாலு புத்தகம் படிச்சிட்டு அஞ்சாவது புத்தம் எழுதுறவன் எழுத்தான்தான், படைப்பாளியல்ல. படைப்பாளி என்பவன் அவனுடைய அனுபவத்திலேர்ந்து எழுதக்கூடியவன். எழுத்தாளன் என்பவன் வாசிச்சி எழுதக் கூடியவன்.

அப்புறம் இப்போ புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர் கள் எழுத்தாளர் களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத் தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாப னோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்’ ஐ பாதிக்காது. ஜெய மோகனோட `ரப்பர்’ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம் டி.வி.யிலே கிடைக்காது. டால்ஸ்டாய் நாவலை படிக்கிற இன்பம் டி.வி.யிலே கிடைக்குமா?………..தோப்பில் முஹமது மீரான்