October 5, 2022

தொண்டன் திரை விமர்சனம்!

சினிமா என்பதே சராசரி மனிதன் செய்ய இயலாததை செய்பவரைக் கண்டு மகிழ்ச்சி அடைவதும், தான் சொல்ல முடியாததை சொல்லும் கேரக்டருக்கு சபாஷ் சொல்லி கைதட்டி பாராட்டு தெரி வித்ததும்தான் ரசிகனின் பழக்கம். இதை கவனத்தில் கொண்டு ஒரு முழு சினிமாவுக்கு கதை, வசனம் எழுதி இயக்கி நடித்து அசத்தி இருக்கிறார் சமுத்திரக்கனி.

கதையென்று பார்த்தால் ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் மகாவிஷ்ணு (சமுத்திரக்கனி) நட்டநடு ரோட்டில் எதிரிகளால் வெட்டிச் சாய்யக்கப்படும் ஒருவரைத் தன் வாகனத்தில் எற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார். அதே சமயம் வெட்டுப்பட்ட ஆசாமியின் உயிர் போகவில்லை என்று தெரிந்ததும் அவரை அந்த ஆம்புலன்ஸிலேயே தீர்த்துக் கட்ட எதிராளி நாராயணன் (நமோ நாராயணன்) தன் குரூப்புக்கு கட்டளையிடுகிறார். ஆனால் உயிர் வாகன( அம்புலன்ஸ் பெயர்) பைலடான சமுத்திரக்கனி அந்தக் கொலைக் கும்பலிடம் இருந்து பாதுகாப்பாக அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்து விடுகிறார். இதனால் வேறு என்ன? சமுத்திரக்கனிக்கும், நமோ நாராயணனுக்கும் பகை ஆரம்பம்.

பின்னர் ஒரு சமயம் இதே நாராயணனின் தம்பி சவுந்தரராஜா ஒரு வுமன் காலேஜூக்குள் நுழைந்து அடாவடி செய்த போது அங்கிருந்த காலேஜ் கேர்ஸ்களால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் போது சமுத்திரக் கனியின் ஆம்புலன்ஸில் ஏற்றப் பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்ன நிலையில் தன்னைப் பழி வாங்குவதற்காகவே சமுத்திரக்கனி தன் தம்பியைக் கொன்று விட்டதாக நினைக்கும் நாராயணனின் கோபம் அதிகரிக்கிறது. அப்புறம் அந்த நாராயணனால் சமுத்திரக்கனி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? அதை சமுத்திரக்கனி எப்படிச் சமாளித்து எதிர்கொண்டார் என்பதுதான் மீதிக் கதை.

நாட்டில் தற்போது(ம்) நடக்கும் சாதி அரசியலில் அரம்பித்து மாணவிகள், பெண்களுக்கு எதிரான கொடுமை, பணப் பதுக்கல், சமீபத்தில் வெடித்த ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல், விவசாயிகள் பிரச்சினை என்று சீன் பை சீன் அண்மை நடப்புப் சம்பவகளை அலசுகிறது படம். வசனங்கள் பல இடங்களில் வலுவாகவே இருக்கின்றன. இந்தக் கருத்துகள் முழுக்க பிரச்சாரமாக ஆகிவிடக் கூடாது என்று நகைச்சுவை, காதல், நட்பு ஆகிய விஷயங்களைத் திரைக்கதைக்குள் நுழைத்திருக்கிறார் கனி. ஆனால் அதையெல்லாம் மீறி வசனத்தை வலுவாக திணிக்கும் பிரச்சார படமாகவே இருக்கிறது. ஆனாலும் தன்னை சுற்றி உள்ள எல்லா கேரக்டர்களுக்கும்  போதிய பங்கை கொடுத்திருக்கிறார் ஆனாலும் அது ஏனோ ஒட்டவில்லை

குறிப்பாக விக்ராந்த் மனம் மாறும் இடம், கல்லூரி மாணவிகளின் குமுறல், தன் குருநாதர் கூற்றுப்படி சமுத்திரக்கனி எதிரியை நேரடியாகப் பழி வாங்காமல் திசை மாற்றிவிடுவது உள்ளிட்ட பல காட்சிகள் பார்க்க நன்றாக இருந்தாலும் மனதில் பதியும் வகையில் இல்லை என்பதை ஆடியன்ஸ் கமெண்டுகளே சொல்கிறது.. காவல்துறை அதிகாரிகளில் நல்லவருமுண்டு, கெட்டவருமுண்டு என்பதை கேஷூவலாக வெளிப்படுத்தி இருப்பது பொருத்தமாகவும் இருந்தது..

சுனைனா, சமுத்திரக்கனி காதல் காட்சிகள் ஒட்டவில்லை. அது போல் எல்லா விதமான குற்றங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் தாசில்தார், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் நல்லவர்களாக மாறும் இடம் செயற்கையாக இருக்கிறது. அத்துடன் அவரை காண அழைக்கும்அரசியல்வாதியிடம் நடந்து கொள்ளும் விதம் வலுவாக உருப்பெறவில்லை. அதே சமயம், நம் நாட்டில் அழிந்து போன மாடுகளின் வகைகளை மூச்சு வாங்க சொல்லி கைத்தட்டல் அள்ளுகிறார். ஏகாம்பரம், ரிச்சர்ட் எம்.நாதன் ஆகியோரின் ஒளிப்பதிவு நன்று. பின்னணி இசையில் அசத்தியுள்ள ஜஸ்டின் பிரபாகர் பாடல் இசையில் சுமார்தான்.
மொத்தத்தில் சமூக மாற்றம், தார்மீகப் போராட்டம் ஆகியவற்றை ஆரம்பிக்கக வன்முறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடாது என்பதை கொஞ்சம் ஸ்ட்ராங்க சொன்னதற்காக இயக்குநர் சமுத்திரக்கனிக்கு சபாஷ் சொல்லலாம்.