இந்த மெட்ராஸ் டே தினம் -தமிழர், தமிழ்நாட்டு பண்பாடு, வரலாற்றுக்கு புறம்பானது!
சென்னையின் வயது 383 அல்ல, 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. சங்கம் காலம் தொட்டு எப்படி கீழடி போன்ற இடங்கள் உள்ளனவோ, அதைபோல சென்னையும் ஒரு சிறந்த நகரமாக 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்துள்ளது. வெள்ளைக்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு துதி பாடும் ஒரு கூட்டம் தவறான தகவல்களை வழங்கி ஏதோ ஆங்கிலேயர்கள் வந்த பிறகு தான் சென்னை வந்தது என்று ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன் மயிலையில் திருவள்ளுவர் வாழ்ந்தார், அவர் குறளை இங்கே 2000 ஆண்டுகளுக்கு முன் வழங்கினார் என்றால் , மயிலாப்பூர் வயது குறைந்தது 2000 என்றால், சென்னைக்கு எப்படி வயது 383 ஆக இருக்க முடியும்? சென்னையின் பல்வேறு பகுதிகளில் 1000 ஆண்களுக்கு முன் நிறுவப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன, நூற்றுகணக்கான கோவில்கள் 1000 முதல் 1500 ஆண்டுகள் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் அரசின் கலை பண்பாட்டுத் துறை, தொல்பொருள் ஆராய்ச்சி துறை, ஆதாரபூர்வமாக தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும் போது இந்த மெட்ராஸ் டே கூட்டம் எப்படி சென்னையின் வயது, வரலாற்றை மாற்றி எழுத முயற்சி செய்து, 383 என்று சொல்ல முடியும்? இது அப்பட்டமான பொய் பிரசாரம், உண்மையான வரலாற்றுக்கு எதிரானது.
இதை சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை வன்மையாக கண்டிக்கிறது. இதுவரை எல்லா அரசுகளும் இந்த மெட்ராஸ் டே தினத்தை எதிர்த்தன, சென்னை நாள் என்பது செப்டம்பர் 30 தான் என்று ஏற்றுக்கொண்டனர். இந்த மெட்ராஸ் டே தினத்தை தமிழர், தமிழ்நாட்டு பண்பாடு, வரலாற்றுக்கு புறம்பானது என்று சொல்லி ஒதுக்கி வைத்தனர் . இதை மீறும் அளவிற்கு ஒரு அரசு நிறுவனம் அறியாமையினால் கொண்டாட முயற்சி செய்தால் அதை தமிழக அரசு தடுக்க வேண்டும் , தடை விதிக்க வேண்டும்.
அண்ணா, மு கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு துதி பாடும் மெட்ராஸ் டே வை ஒரு போதும் ஆதரிக்க வில்லை, எதிர்த்தார்கள். இந்த ஆட்சியும் தமிழர்கள் சார்பாக, சென்னையின் 2000 ஆண்டுகளுக்கு மேலான பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்கும் விதத்தில் , தமிழர்களின் உணர்வோடு துணையாக இருக்க வேண்டும், அரசுத்துறை எதுவும் இந்த போலியான கொண்டாட்டங்களை தவிர்க்கவேண்டும், என்று கலைஞர் வழி வந்த முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிக்கவேண்டும்.
ஆர். ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 பிளஸ் அறக்கட்டளை.
ஆந்தை பீடியா குறிப்பு!
சென்னை என்பது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகும். இந்நகரம் முதலில் மதராசு என அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய நகரமாகும். இது சுமார் 400 ஆண்டுகள் பழமையான நகரம் ஆகும். இது உலகிலேயே 31 ஆவது பெரிய பெருநகரப் பகுதியாகும். மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்ற பெயரும் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களின் பெயரில் இருந்துதான் தோன்றியது எனப் பரவலாக நம்பப்படுகின்றது.
கிழக்கிந்திய கம்பெனி குடியமர்வதற்காகத் தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராஸப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன. இந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான நிலப்பரப்பே தற்காலத்தில் சென்னை என்று அழைக்கப்படுகிறது. மெட்ராஸ் 1639-இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் விஜயநகரப் பேரரசான டமர்லா வெங்கட்ரி நாயக்காவிடம் இருந்து வாங்கப்பட்டது.
அந்த மெட்ராஸின் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் பற்றிய விரிவுரைகள் முதல் குழந்தை களுக்கான வினாடி வினா போட்டிகள் மற்றும் அனைவருக்கும் பாரம்பரிய நடைகள் வரை, மெட்ராஸ் தினம் 2004 முதல் பயனுள்ள மற்றும் தகவல் தரும் வகையில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.